முல்லைத்தீவு காட்டுக்குள் மனித கேடயமாக ஒரு லட்சம் தமிழர்கள்

புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை ராணுவ வீரர்கள் கிளிநொச்சி நகருக்குள் நுழைந்ததும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாயினர். நகரில் தண்ணீர் மற்றும் மின் வினியோகத்தை முற்றிலும் துண்டித்து விட்டு சென்ற புலிகள், பல கட்டடங்களையும் தரை மட்டமாக்கி விட்டே, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்த கிளிநொச்சி, ஆள் அரவமற்று வெறிச்சோடி காணப்பட்டது. அவர்கள் அனைவரையும் முல்லைத் தீவில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகள், மனித கேடயமாக பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில், ராணுவத்துக்கு கடந்த வாரம் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

கடுமையான உயிர்ச் சேதத்துக்கு பின், புலிகளின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரான கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. வெற்றி ஆரவாரத்துடன் கிளிநொச்சிக்குள் நுழைந்த ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்த மிகவும் பரபரப்பான நகரம் கிளிநொச்சி. இப்போது ஆள் நடமாட்டம் எதுவும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் நடமாட்டமே இல்லை. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் மிகவும் நோய்வாய்ப்பட்ட 30 பேர் மட்டுமே இருந்தனர்.படிப்படியாக நகருக்குள் ஊடுருவிய ராணுவத்துக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. நகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களும் உருக்குலைந்து தரை மட்டமாக காட்சி அளித்தன.

வீடுகளின் ஆஸ்பெஸ்டாஸ், ஜன்னல் மற்றும் கதவுகள் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தன.நகர் முழுவதற்கும் தண்ணீர் சப்ளை செய்த 140 அடி உயரமுள்ள தண்ணீர் டாங்க், வெடி குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டு, தரைமட்டமாகி கிடந்தது. நகருக்கு தண்ணீர் சப்ளைக்கு பயன்படுத்தப்பட்ட குழாய்கள் துண்டிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கிடந்தன. மின்சார ஒயர்களும் துண்டிக்கப்பட்டு இருந்தன. நகரின் ஒரு இடத்தில் கூட மின்சார கம்பங்களை காண முடியவில்லை.

புழுதி பறக்கச் சென்ற ராணுவ லாரிகளும், துப்பாக்கிகள் சகிதமான ராணுவ வீரர்களின் நடமாட்டமும் மட்டுமே கிளிநொச்சியில் காணப்பட்டது. மொத்தத்தில் கிளிநொச்சி, நிர்வாக ரீதியாக எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. மிகப் பெரிய பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பூமி போல் காட்சி அளித்தது.

கிளிநொச்சிக்கு சென்ற வெளிநாட்டு செய்தியாளர்களிடம் ராணுவ அதிகாரிகள் அங்குள்ள நிலைமை பற்றி விளக்கினர். ராணுவ அதிகாரி ஜகதீஷ் தியாஸ் கூறியதாவது:

கிளிநொச்சியை இழந்து விடுவோம் என, புலிகளுக்கு முன்னதாகவே தெரிந்து விட்டது. ஒரு வாரத்துக்கு முன்பாகவே, பொதுமக்களை முல்லைத் தீவுக்கு இடம் பெயரும்படி, கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். புலிகள் அமைப்பினரும், முல்லைத் தீவில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் தான் பதுங்கியுள்ளனர். இருந்தாலும், ராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் திரும்பவும் கிளிநொச்சிக்கு திரும்புவர். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஏற்கனவே நாங்கள் யாழ்ப்பாணத்தை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபோது, இதே நிலைமை தான் இருந்தது. ஆனால், சிறிது காலத்துக்கு பின் பொதுமக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு திரும்பினர். கிளிநொச்சியிலும் அதேபோன்ற சம்பவம் நிகழும்.இவ்வாறு ஜகதீஷ் தியாஸ் கூறினார்.

புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களும், அந்த அமைப்பை சேர்ந்தவர்களும் முல்லைத் தீவில் உள்ள வனப் பகுதியில் மறைவிடங்களில் பதுங்கியுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து சென்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை அவர்கள் தங்களுக்கான மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கிளிநொச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.கண்ணி வெடிகள் எதுவும் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என, ஒவ்வொரு இடமாக தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகையில், “தற்போது நடந்து வரும் சண்டையில், அப்பாவி பொதுமக்களின் உயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை புலிகள், சிறைக் கைதிகளைப் போல் பிடித்து வைத்துள்ளனர். மக்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்கவிட்டால், புலிகள் அமைப்புக்கு இலங்கையில் தடை விதிக்கப்படும்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply