வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பைக் கண்டித்து வவுனியாவில் இன்று உண்ணாவிரதப் போர்

காணிப்பதிவு என்னும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்புச் செயற்பாடுகள் உட்பட வடக்கு, கிழக்கில் நிலவும் பல் வேறு பிரச்சினைகளை அரசினதும் சர்வதேசத்தி னதும் கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கின்றது.

வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைகளை மாற்றி வெலிஓயா என்னும் புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்குவதன் மூலம் அந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையில் கசப்புணர்வையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்துக.
போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும், சொத்துகளையும் இழந்து நிற்கும் நிலையில், காணிப்பதிவு எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடியான நில அபகரிப்புச்செயற்பாடுகளை உடன் நிறுத்துக.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் காணி, வீடுகள் அற்று நிர்க்கதியான நிலையில் தவிக்கும் இவ்வேளையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவக் குடியேற்றங்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் ஊடாக இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக. ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகள் அண்மையில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்திலேயே அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முடிவை எடுத்தன.

இன்று நடைபெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியும் கலந்துகொள்கின்றது.கொழும்பில் இருந்து வவுனியா செல்லும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குருபரன் உட்படக் கட்சி முக்கிய நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply