காணிப் பதிவுகளை உடன் நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும் : மாவை சேனாதிராசா
தமிழர் பகுதிகளில் காணிப்பதிவு உட்பட தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குரோதச் செயற்பாடுகளை அரசு உடன் நிறுத்தாவிடின் மக்களைத் திரட்டி போராட்டங்களைப் பல வடிவங்களில் முன்னெடுப்போம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழுகின்றார்களோ அங்கெல்லாம் எமது சாத்வீகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று வவுனியாவில் முழக்கமிட்டார். “தமிழர்களின் காணிகள், வீடுகள் என்பன இன்னும் அரசினதும், இராணுவத்தினதும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அரசு விரைவில் அவற்றை மக்களிடம் கையளிக்கவேண்டும். அத்துடன், காணிப்பதிவையும் உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்குள்ள ஜனநாயக சக்திகளோடு இணைந்து எமது சாத்வீகப் போராட்டங்களை மேலும் பல வடிவங்களில் முன்னெடுப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றம், நில அபகரிப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களப் பிரதேச செயலகம் அமைத்தல், வடக்கில் அரசு மேற்கொள்ளும் காணிப் பதிவுகள் என்பவற்றைக் கண்டித்தும் அவற்றை உடன் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தது.
நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், எஸ்.சிறிதரன் உட்படத் தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மக்கள் நகர சபை மைதானத்துக்கு வரமுடியாதவாறு சுற்றியிருந்த நான்கு வீதிகளிலும் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். அதனையும் மீறி பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்ததாவது:
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தின் கெடுபிடி அதிகரித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகம் இல்லை. சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இராணுவத்தின் ஆக்கிரமிப்பும் அவர்களின் கட்டளைகளும் எம்மக்களை வாட்டி வதைக்கின்றன. அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டோம் என அரசு கூறுகின்றது. அந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும் உடன்பிறப்புக்கு ஒப்பான பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட எம்மக்கள் நீண்டகாலமாக எவ்வித வழக்கு விசாரணைகளுமின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டமும் உடன் நீக்கப்படவேண்டும். அவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் அரசு நீக்கும் பட்சத்திலேயே சுதந்திரமாக வாழக்கூடியதொரு நிலை நாட்டில் ஏற்படும் என நாம் நம்புகின்றோம்.
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்னெடுத்து நாம் இன்று இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எமது கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அரசு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். காணிப்பதிவு உட்பட தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள குரோதச் செயற்பாடுகளை அரசு உடன் நிறுத்தவேண்டும்.அதேபோன்று, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்றும், மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பி சுதந்திரமாக வாழக்கூடியதொரு நிலை ஏற்படவேண்டும் என்பதை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் மக்களின் பிரதிபலிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் ஒரு புனிதமான இயக்கம் என நாம் நம்புகின்றோம்.இந்த இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு அரச தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டங்களைப் போன்று மேலும் பல போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழ்ப் பிரதேசம் முழுவதும் வேண்டுமானால் தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்குள்ள ஜனநாயக சக்திகளை இணைத்து மேலும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார் மாவை எம்.பி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply