இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு நான் இன்னும் உயிர்வாழ வேண்டுமா?ஆனந்த சங்கரி
காணி அபகரிப்பு மற்றும் சிங்களக்குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 17.10.2011 அன்று நடாத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் நந்திக்கடல்வரை சுமார் 8000ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் விமானப்படைக்குரியது என்று பலகை வைத்துள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் சொன்ன விடயம் இன்னமும் எனது மனவேதனையை அதிகரித்து விட்டது. இத்தகைய அடாவடித்தனங்களைக் கண்டபிறகும் எனது உயிர் பிரிய மாட்டேன் என்கிறதே என்று எனக்;குக் கவலையாக உள்ளது. இன்னும் நான் ஏன் வாழ வேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது என்றும் கூறினார்.
அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது இன்றைய உண்ணாவிரதம் என்னை 30வருடஙகள் பின்னோக்கிப் பார்க்க வைக்கின்றது. அன்றைய அதிபர் சிறிமாவோ அம்மையார் தனிச்சிங்கள சட்டத்தை அமுல்படுத்தியபோது இதே வவுனியா நகரசபை மைதானத்திலே நாங்கள் உண்ணாவிரதம் இருந்தது எனது நினைவுகளுக்கு வருகின்றது. அன்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் எமது உண்ணாவிரதத்தைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். எம்மினத்துக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து எம்மினத்தவர்களே துரோகம் இழைத்த வரலாறுகள் எம்மிடம் நிறையவே உள்ளன. இன்றும்கூட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஏராளமான மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற காணி உத்தியோகத்தர் ஒருவர் தற்போதைய காணிப்பதிவு முறைமை சிறந்ததென்று ஊடகங்களின் மூலம் தெரிவித்துள்ளார். அவருக்கு நான் ஒன்றை சொல்லி;கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் நீங்கள் தாராளமாக உங்கள் குடும்பத்தினருடன் உங்களது எஞ்சிய வாழ்க்கையை அனுபவியுங்கள். எமது மக்களுக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் உருப்படியான யோசனைகளைச் சொல்லுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்.
கடந்த 30ஆண்டுகால வாழ்க்கையில் எமதுமக்கள் இலட்சக்கணக்கில் மடிந்துள்ளனர். இறந்தவர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. காணிபூமியுடன் வளமாக வாழ்ந்தவர்கள். அவர்களின் வாரிசுகளுக்கு தங்கள் காணி எங்கிருக்கின்றது என்பதே தெரியாது. அத்துடன் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்து ஓடியவர்கள் தங்களது காணி உறுதிகளைத் தொலைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து ஓருலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வரவிருக்கின்றனர். அவர்களது காணிகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது இந்த அரசாங்கம்? இந்த நேரத்தில் இத்தகைய பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
அரசாங்கம் துரிதகதியில் மேற்கொள்ளும் இத்தகைய செயல் தொடருமானால் எமது இனம் இல்லாமலேயே போய்விடும். இவைகளை எல்லாம் சிந்தித்துத்தான் நாங்கள் அனைவரும் எம்மிடமுள்ள சிறுசிறு வேற்றுமைகளை மறந்து ஓரணியாக அணிதிரண்டு எமது மக்களின் எதிர்ப்பை இன்று அரசாங்கத்திற்குக் காண்பித்திருக்கிறோம்.
இன்று எத்தகைய உயர்பீடத்திலும் தமிழர்கள் இல்லை. முன்பு ஓரளவிற்கு உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்தார்கள். இன்று இலங்கை பொதுநிர்வாகத்திற்கான சோதனையில் ஒரு தமிழரும் சித்தியடையாத நிலைதோன்றியுள்ளது. இந்த நாட்டில் நாம் மனிதர்களாக வாழ்வோமா என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் இத்தகைய செயலைத் தடுத்துநிறுத்த வேண்டும். எனவே இப்பொழுது நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம் அதனை நாம் திடசங்கல்பமாக ஏற்போம் என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply