பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. ராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூவருக்குமான தூக்குத் தண்டனைக்கு 8 வார காலம் தடை விதித்து, இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் “சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. எனவே வழக்கு விசாரணையை சென்னையில் தொடர்நதால் அது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் தூக்குத் தண்டனை குறித்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கே மாற்றி விசாரிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சிங்க்வி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்நிலையில் சிங்க்வி விடுமுறையில் இருப்பதால் இந்த வழக்கு 3 பேர் கொண்ட வேறு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி “இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது.நீதிபதி சிங்க்வி தற்போது விடுமுறையில் உள்ளார்.
அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த அமர்வு விசாரிக்கக் கூடாது. தவறான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று வந்துள்ளது” என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட 3 நீதிபதிகளும் நீதிபதி சிங்க்வி வந்த பின்னர் அந்த அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ராம்ஜெத்மலானியுடன் இந்த வழக்குக்காக டெல்லிக்குப் போயிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் “ராம்ஜெத்மலானியின் வாதத் திறமையால் மூன்று பேரின் தூக்குக் கயிறும் அறுபடும்.அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் முறியடிக்கப்படும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply