கிளிநொச்சியில் புதிய இராணுவ தலைமையகம்
இலங்கை இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை, அதிலிருந்து தப்பியோடியிருப்பவர்கள் மீண்டும் உருவாக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இராணுவத்தின் பொறுப்பாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ கிளிநொச்சியில் தெரிவித்திருக்கின்றார். வட இலங்கையில் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சியில், இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ தலைமையகத் தொகுதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ வைபவரீதியாகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியிருக்கின்றார்.
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 40 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், இராணுவத்தினரின் பெரும் தியாகத்தின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அடைந்துள்ள வெற்றியைப் பேணி பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு அமைதியும் சமாதானமும் நிறைந்த நாடொன்றைக் கையளிக்க வேண்டியிருக்கின்றது. எனவே, அதற்கு ஏற்ற வகையில் மீண்டும் விடுதலைப்புலிகள் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபாயா தெரிவித்திருக்கின்றார்.
யுத்த காலத்தில் ஒரு படையணியாகத் திகழ்ந்த இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு இப்போது ஆறு அணிகளாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமாதானச் சூழ்நிலையில் இராணுவத்தினர் என்னென்ன கடமைகளில் ஈடுபட வேண்டுமோ அத்தகைய கடமைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதற்கான தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க வகையில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் முக்கிய இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply