துருக்கியில் பாரிய பூகம்பம்: 1000 பேர் பலி என அச்சம்

துருக்கியின் கிழக்குப் பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஈரான் எல்லை அருகேயுள்ள வான் மாகாணத்தின் தபன்லில் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதில் வான் நகரில் உள்ள கட்டிடங்கள், ஹோட்டல்கள் உட்பட ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
பூகம்பத்தால் வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்ற இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கி 1000 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிந்த கட்டிடங்களில் ஏராளமானவர்கள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

பூகம்பம் பாதித்த நகரங்களில் மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள ‘சாட்டலைட் போன்கள் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஈரான் எல்லைப் பகுதியிலும் பூகம்ப அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் பல நகரங்களில் மக்கள் பீதி அடைந்து காணப்படுகின்றனர்.

இதனால் பல நகரங்களில் பதற்றம் நிலவுகின்றது. பூகம்ப செய்தியைக் கேட்ட துருக்கிப் பிரதமர் ரிசிப் டயிப் அரசு முறை பணிகளை ஒதுக்கிவிட்டு, உடனடியாக பூகம்பம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் மீட்பு பணியைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வான் நகரின் வடகிழக்கில் 19 கி.மீ. தொலையில் உள்ள தபன்லில் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த முதல் பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவானது.

அடுத்த பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூகம்ப அபாயம் உள்ள துருக்கியில் ஏற்கனவே 1976இல் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி, 3,840 பேரும், 1999இல் ஏற்பட்ட 2 பூகம்பங்களில் சிக்கி 20,000 பேரும் பலியானமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply