தலைமைத்துவ போட்டியால் ஐ. தே. க. வுக்குள் பெரும் பூசல்

தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் சர்ச்சையும் எதிர்ப் புகளும் பூதாகார மெடுத்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.1997லிருந்து நிலவிவரும் உறுதியற்ற தலைமைத்துவம் காரணமாக சரிவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமெனில் உடனடியாக தலைமைத்துவ மாற்றம் தேவை என கட்சியின் அதிருப்தி குழு தெரிவிக்கின்றது.
தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காக கட்சி சம்மேளனத்தைக் கூட்ட வேண்டுமென இக்குழு சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய போன்ற பிரதித் தலைவர்களுக்கு வேண்டு கோள் விடுக்கிறது.தலைமைத்துவ மாற்றம் தேவை எனத் தெரிவிக்கும் அதிருப்திக் குழுவினர் நேற்று  தெரிவித்த போது; கிழக்கு மாகாணம், மேல், மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய பிரதேசங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளாக விளங்கின. கடந்த தேர்தல்களை நோக்கு கையில், இப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வீழ்ச்சியை உணர முடிகின்றது எனத் தெரிவித்தனர்.

அக்குழுவினர் மேலும் தெரிவிக்கையில்:-

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த 1997ம் ஆண்டுக்குப் பின்னர் கட்சியின் அமைப்பாளர்களாக அர்ப்பணிப் புடன் செயற்பட்ட பலர் விலகிக் கொண்டுள்ளனர். இவர்களில் ரிஸ்வி சின்ன லெப்பை, உதுமாலெவ்வை, மாஹிர், மசூர் மெளலானா போன்றவர்களைக் குறிப்பிட முடியும்.

கட்சியின் தலைமைத்தவ அதிருப்தி காரணமாக முதலில் சிரேஷ்ட உறுப்பினரான டிரோன் பெர்னாண்டோ விலகிய போது, அவர் விலகியதை ரணில் விக்கிரமசிங்க பொருட்படுத்தவில்லை. அதனையடுத்து சரத் அமுனுகம, விஜயபால மெண்டிஸ், கல்பகே என பெரும்பாலானவர்கள் கட்சியிலிருந்து விலகினர்.

சிலர் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்ட போதும், இன்னும் பலர் செய்வதறியாது திக்கற்று நிற்கின்றனர். இவர்களையும் இணைத்துக்கொண்டு மீள கட்சியை பலமான எதிர்க்கட்சியாகக் கட்டியெழுப்ப தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையென அதிருப்திக் குழுவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சரான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கருத்துத் தெரிவித்தார். தலைமைத்துவ மாற்றமே பலமான எதிர்க்கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தின் போது செயற்குழுவின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஷிரால் லக்திலக்க ஆகியோரது கட்சி அங்கத்துவத் தடை பற்றிய முன்மொழிவு கொண்டு வரப்பட உள்ளதாக கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாகவும், அதன்போது குற்றச் சாட்டுக்களிலிருந்து விடுபடுவதற்கான காரணங்களைக் கூறி குற்றச்சாட்டுகளிலிருந்து விடபட முடியுமெனவும், அவர் வலியுறுத் தினார். இங்கு அவர்கள் விடுபடுவதற்கு உரிய காரணங்களை முன்வைக்காத பட்சத்தில், அவர்களது கட்சி அங்கத்துவம் இடை நிறுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

புத்திக்க ஷிரால் ஆகியோருக்கு கட்சி மேற்கொள்ள உள்ள நடவடிக்கை தொடர் பாக மிகவும் அவதானமாக உள்ளதாக சஜித் அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.புத்திக்க ஷிரால் ஆகிய இருவருக்கும் எதுவித அநீதிகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply