கூட்டமைப்பு தமது மக்களின் குறைகளை சர்வதேசத்துக்கு கூறுவதில் எந்தவித தவறும் இல்லை : ஐ.தே.க.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவதில் அரசாங்கத்திடம் உண்மைத் தன்மையோ வெளிப்படைத் தன்மையோ கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முயற்சியாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயமானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். தமது மக்களின் குறைகளை கூட்டமைப்பினர் தெளிவுபடுத்துவதில் தவறு கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. மேலும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் இல்லாதவாறு நேர்மையாக செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் மற்றும் பொது நலவாய நாடுகள் மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

. மேலும் கூறுகையில், பொதுநலவாய நாடுகளின் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. இதில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சென்றிருக்கின்றார். அரச தலைவர்கள், இம்மாநாட்டில் பங்கு கொள்வது இயல்பான விடயமாகும். இந்நிலையில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான பல சவால்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் சர்வதேச ரீதியாக எழுகின்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கும் எழுகின்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் அரசாங்கம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் சர்வதேச நாடுகளைப் பகைத்துக் கொள்வதில் பலன் இல்லை. பொதுநலவாய நாடுகள் அனைத்திலும் இலங்கைக்கான தூதுவர்கள் உள்ளனர் இவர்களினூடாக ராஜதந்திர நடவடிக்கைகளை அரசு கையாளவேண்டும்.

மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்பு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றது. இது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பொதுவானதாகும்.

எனவே, கூட்டமைப்பு அமெரிக்கா சென்றமை அல்லது ஏனைய நாடுகளுக்கு செல்கின்றமை, தமது நிலைப்பாடுகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்கின்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல எந்தவொரு கட்சியும் ஆட்சேபிக்க முடியாது. அது அவர்களுக்கே உரிய ஜனநாயக உரிமையாகும். அதனைக் கட்டுப்படுத்தவோ தடைசெய்யவோ முடியாது.

தமிழ் மக்களின் விடயம் தொடர்பிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் அரசாங்கம் தவறிழைத்து விட்டமையே இவ்விவகாரம் சர்வதேச மட்டத்துக்கு சென்றிருப்பதற்கும் சர்வதேச நாடுகள் எமது விடயங்களில் மூக்கை நுழைப்பதற்கும் அடிப்படைக் காரணமாகும்.

யுத்தம் நிறைவடைந்து இரண்டரை வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. யாவும் கிடப்பில் போட்டவாறே உள்ளன.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டும் நோக்கில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இதுவரையில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் மேற்படி பேச்சுக்களில் ஆளும் தரப்பு சார்பில் வெளிப்படைத் தன்மை இல்லாதிருப்பதையே உணர முடிகின்றது. பேச்சுக்களை இழுத்தடித்து நாட்களைக் கடத்துவதிலேயே அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றது.

அது மட்டுமல்லாது நாட்களைக் கடத்துவதன் மூலம் மூடி மறைப்புக்களை மேற் கொள்வதானது அரசியல் தீர்வை முன்வைக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்பதையே காட்டிநிற்கின்றது.

இவ்வாறான நிலைமைகளே உள்நாட்டுப் பிரச்சினை சர்வதேசத்துக்கு செல்கின்றமைக்கு வழி வகுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அமெரிக்காவின் அழைப்பு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் என அனைத்தும் இதனடிப்படையிலேயே இடம் பெற்று வருகின்றன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply