ஜெகதீஸ்வரனை மனிதாபிமான முறையில் விடுதலை செய்க: வினோ

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு கொடுத்து புதுவாழ்வுக்குள் இணைத்துக்கொள்கின்ற அரசாங்கம் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரனை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) – வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு வினோநோகராதலிங்கம் எம்.பி எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற அரசியல் கைதியின் விடுதலையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கையாண்டு விடுவிக்க வேண்டும்.

இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொழும்பு வைத்தியசாலையில் கால்விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிரந்தர நோயாளிக்கைதியான ஜெகதீஸ்வரன் பற்றி மனிதாபிமான அமைப்புக்களும், சக அரசியல் கைதிகளும், அரசியல் வாதிகள், பொது அமைப்புக்கள் என பலரும் ஊடகங்க@டாகவும், நேரடியாகவும் உங்களிடமும், அரசாங்கத்திடமும் முறையிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அக்கைதியின் விடுதலையில் அவசர முடிவெடுக்கும் கடமைப்பாட்டை நீங்கள் கொண்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.

குற்றுயிரும், குறையுயிருமாக இருக்கின்ற ஒரு கைதியை தூக்குக் கயிற்றுக்கு அருகில், கால் விலங்குடன் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்ற ஒரு செயலாகவே இக் கைதியின் நிலைமை இருக்கின்றது. இங்கே மனிதாபிமானம் ஏற்கனவே தூக்குக் கயிற்றுக்குள் அகப்பட்டு இறுக நெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மரணத்தின் வாயிலில் நின்று உயிர்ப் பிச்சை கேட்டும் இக் கைதியின் மரண ஓலம் எவர் காதிலும் புகாமல் இருப்பது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை.

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையீனம் மேலெழுந்து நிற்கும் நிலையிலும் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் இடையில் மனிதத்துவத்துக்கு சக்தி அதிகம் என நம்புகின்றேன். இதன் அடிப்படையில் உங்களால், உங்கள் அரசாங்கத்தால் கருணை கொள்ளப்பட்டு அந்த நோயாளிக் கைதியை விடுவிக்கவும்,சுதந்திரமாக சிகிச்சை பெற்று உடல் குணமாக்கப்படவும்,உயிர் காப்பாற்றப்படவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உங்களைவத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

அரசின் விடுதலையில் ஏற்படும் கணத்துளி தாமதமும் ஏனைய அரசியல் கைதிகளின் குமுறல்களுக்கும், ஏக்கங்களுக்கும், நம்பிக்கை அற்றதொரு நிலையை தோற்றுவித்துவிடும். சிறைச்சாலைகளுக்குள் மன நோயாளிகளை அதிகரிக்கச்செய்யும். இந்த நிலையை தடுக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வெரு செயற்பாடுகளையும் முதன் நிலைப் படுத்துமாறு கோரிநிற்கின்றேன்.

புலிகள் இயக்கப் போராளிகளைப் புனர்வாழ்வு கொடுத்து புதுவாழ்வுக்குள் இணைத்துக்கொள்கின்ற அரசாங்கம் நீதி கேட்டு நியாயத்துக்காக சிறைச்சுவர்களுக்குள் போராடும், வாழ்வை இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பக்கம் கருணைப் பார்வையை நீதியுடன் பார்க்க வேண்டும் என மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ___

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply