சர்வதேசத்திடம் முறையிடுவதே ஒரே வழி : மனோ

உள்நாட்டலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக் கூடிய அனைத்து வழிகளையுமிந்த அரசாங்கம் மூடி வைத்திருக்கின்றது. இந்நிலையில் உள்நாட்டில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதையும் வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்கு கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறைகாண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது மூளைக் கோளாறு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மேற்குலக பயணம் தொடர்பில் சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கூட்டமைப்பின் எம்.பி. க்கள் அமெரிக்க அரசின் அழைப்பினை ஏற்று அங்கு சென்றுள்ளார்கள். இதை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச மற்றும் தேசப்பற்றுள் தேசிய இயக்கத்தினர் ஆகியோர் கடுமையாக எதிர்க்கின்றனர். அதேபோல் அரசாங்கத்தில் இருக்கின்ற இன்னும் சில அமைச்சர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கூட்டமைப்பினர் உள்நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்தவிட்டு வெளிநாடு செல்லவில்லை. அரசாங்கத்துடன் பல சுற்றுபேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு நடத்தியுள்ளது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளுக்கு எந்தவித பலா பலனும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அரசியற் தீர்வு ஒருபுறமிருக்க, அன்றாட பிரச்சினைகளில் கூட தீர்வு காணப்படவில்லை. நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் தடுப்புக் காவல் கைதிகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக வடக்கில் தமிழ் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. வடக்கின் குடிப்பரம்பலை மாற்றி, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் நிறுத்தப்படவில்லை. தமிழ்ப் பகுதிகளில் இருக்கக் கூடிய இராணுவ பிரசன்னத்தைக் குறைக்கவில்லை. இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.

பிரதமர் டி.எம். ஜயரட்ன வெளிநாடு சென்று பேசத் தேவையில்லை. உள்நாட்டில் ஆறு மாதத்திலே பேசித் தீர்ப்போம் என வாக்குறுதி அளித்துள்ளார். யுத்தம் முடிந்ததும் தீர்வு தருகின்றோம் என்று சொல்லி இன்று பல ஆறு மாதங்கள்ஆகிவிட்டன. இந்நிலையில் இன்னும் எத்தனை ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்துகின்ற அமெரிக்க மற்று இந்திய அரசாங்கங்கள் தான் இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர்களாவர். எனவே அரசியற் தீர்வைப் பெற்றுத் தர வேண்டிய கடப்பாடு இந்நாடுகளுக்கு இருக்கின்றது. இதுவும் கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு வழியேற்படுத்தியுள்ள அடிப்படைக் காரணமாகும். இதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply