அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் : அரியநேத்திரன் எம்.பி

யார் எதைக் கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கான அங்கீகாரமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா இராஜதந்திர ரீதியாக அழைத்துள்ளமையாகும். இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா அரசாங்கத்தின் அழைப்பினையேற்று இராஜதந்திர விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் அரியநேத்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

கடந்த அறுபத்து இரண்டு வருட காலமாக தமிழினம் அஹிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் தமது இனத்தின் விடுதலைக்காக பல்வேறு பட்ட இழப்புக்களைச் சந்தித்து போராடியது. இன்று இவ் இனத்தின் ஆயுதப் போராட்டம் மௌனித்துள்ளது. இருப்பினும் பல்வேறுப்பட்ட வகையிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்காவுக்கான இராஜதந்திர விஜயத்தினை நோக்க முடியும்.

தமிழ் மக்களின் அஹிம்சைவழி போராட்டம் ஆயுதவழி போராட்டம் என்பவற்றை ஒடுக்கி விட்டதாக மார்தட்டிப் பேசுகின்ற பேரினவாத சக்திகள் தமிழ் மக்களின் எண்ணங்கள் அபிலாசைகள் என்பவற்றைப் புரிந்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய கௌரவமான அரசியல் தீர்வினை இதுவரை வழங்காமல் உள்ளமை ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள இராஜதந்திர ரீதியான பயணத்தை பெரிதுபடுத்தியவர்கர் யார் என்ற வினாவும் எழுகிறது .விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும போன்ற அமைச்சர்களும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இன்னும் சில பேரினவாத அரசியல் சக்திகளுமே. இவர்கள் அமெரிக்காவுக்கான இராஜதந்திர ரீதியான பயணத்தின் முக்கியத்துவத்தினை தமிழ் மக்களுக்கு உணர வைத்துள்ளனர்.

இவர்களோடு இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகத்தனம் செய்து விட்டு அற்ப சொற்ப சுயலாபங்களுக்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு அரசாங்கத்தின் ஊதுகுழலாகவுள்ள பியசேன போன்றவர்களுமேயாகும்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் சக்தியாகவும் அரசியல் பலமாகவும் அரசியல் தலைமையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளதென்பதை இன்று சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தியுள்ளதன் வெளிப்பாடே அமெரிக்காவுக்கான இராஜதந்திர பயணமாகும்.

2009ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுத வழிப் போராட்டம் மௌனித்துவிட்ட நிலையில் யுத்தத்தில் வெற்றி கொண்ட கையோடு கௌரவமான அரசியல் தீர்வை அளிக்கவுள்ளதாக கூறிய அரசாங்கம் இதுவரை எதையுமே செய்யாமல் தமிழ் மக்களை புறந்தள்ளி விட்டு அரசியல் செய்ய முற்பட்டதன் வெளிப்பாடுதான் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா சென்றமையாகும். அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிண்டன் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ பிளேக்,மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலராளர் நாயகம் பான் கீ மூன் போன்றோரை சந்தித்து பேசும் நிலை உருவாகக் காரணம் இதுவாகும்.

இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற சகல விதமான உரிமைகளும் சலுகைகளும் சிறுபான்மை சமூகத்திற்கு அளிக்கப்படாமல் மறுக்கப்படுவதும் இம் மக்களின் நிலங்களை கபளீகரம் செய்வதும் கலை கலாசாரங்களை அழிக்க முற்படுவதுமõக மேற்கொள்ளும் தொடரான அநீதிகள் உள்ள வரை நாம் சர்வதேச அங்கீகாரம் பெற்று ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திர அழைப்பை ஏற்று பேசும் நிலை உருவாகுவதைக் கூட எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அரிய நேத்திரன் எம்.பி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply