அப்பாவி சிவிலியன்கள் மீதான விமானக்குண்டுத் தாக்குதலை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பு:தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை

வன்னிச் சிவிலியன்கள் மீது நடத்தப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய திகதிகளில் வௌ;வேறு இடங்களில் இடம்பெற்ற வான் குண்டுத் தாக்குதல்களில் 9 சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 46 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முரசுமோட்டை மற்றும் பரந்தன் ஆகிய பிரதேசங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

வான் தாக்குதல்களின் மூலம் அப்பாவிச் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முரசுமோட்டை மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலேயே வன்னிச் சிவிலியன்கள் இடம்பெயர்ந்து அடைக்கலம் பெற்றுள்ளதாக பேராயர் தெரிவித்துள்ளார்.

எனவே, அப்பாவிச் சிவிலியன்கள் மீது எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக அவர் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது எனவும், சிவிலியன் பாதுகாப்பே முதன்மையானது எனவும் ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply