தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல : அமைச்சர் சமரசிங்க
தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று மனித உரிமைகள் பற்றிய இலங்கையின் விசேட தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான துணைச் செயலாளர் நாயகம் லின் பெஸ்கோ மற்றும் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்த போதே இலங்கை அமைச்சர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ. நா. பொதுச் சபையின் 66வது கூட்டத் தொடரில் பங்குகொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இவ்விரு ஐ. நா. அமைப்பின் முக்கியஸ்தர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பை இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் விரைவில் நியூயோர்கில் ஐ. நா. அமைப்பின் முக்கியஸ்தர்களை ஐ. நா.வின் அழைப்பின் பேரில் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுப்பதற்கு பல அரசியல் கட்சிகள் இருப்பதாகவும் அவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மாறான கொள்கையை கடைப்பிடிப்பதாக வும் ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐ. நா. உரையாடும் போது அவதானமாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்தும் அரசாங்கம் வடக்கு, கிழக்கில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்தும் இவ்விரு ஐ. நா. உயரதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியதாக எமது நிருபரிடம் தெரிவித்தார்.
பெரும்பாலான தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஐ. நா. உயர் அதி காரிகளுடன் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்துக்களை வெளியிட தயாராக இருப்பதாகவும் ஆகவே, அந்த அரசியல் கட்சிகளையும் ஐ. நா. ஸ்தாபனம் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டுமெனவும் திரு. சமரசிங்க இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.
திரு. சமரசிங்க 2010 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் பற்றிய புள்ளிவிபரங்களை ஐ. நாடுகள் இவ்விரு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப் பிற்கு 38.96 சதவீதமான வாக்குகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 35 சதவீதமான வாக்குகளும் கிடைத்ததை எடுத்துரைத்த தாகவும், அதுபோன்று திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 23.81 வீத வாக்குகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 42.78 வீத வாக்குகள் கிடைத்ததையும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply