விலக்கு கேட்டு ஜெயலலிதா மனு
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில், மேலும் நேரில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு தான் எழுத்து மூலம் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், நேரி்ல் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி கடந்த மாதம் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் நேரில் ஆஜரானார். காலை முதல் மாலை வரை இரண்டு நாட்களும் நீதிமன்றத்தில் இருந்த ஜெயலலிதா, நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதையடுத்து, மேலும் கேள்விகள் பாக்கியிருப்பதால், நவம்பர் 8-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என ஜெயலலிதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந் நிலையில், ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தான் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்தப் பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடைவிதிக்க வேண்டும்
இரண்டு நாட்கள் நடந்த விசாரணையில், மொத்தமுள்ள 1500 கேள்விகளில் 567 கேள்விகளுக்கு தான் பதிலளித்திருக்கும் நிலையில், அந்த விசாரணை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நடக்கும் என்று சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால், கூப்பிடும்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு வருவது இயலாது என்று கூறியுள்ளார்.
மீதமுள்ள கேள்விகளுக்கு தான் எழுத்துமூலம் பதிலளிக்கத் தயாராக இருப்பதால், இனிமேல் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
மேலும், நவம்பர் 8-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு, இரண்டொரு நாளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply