அமைச்சர்களின் கருத்துக்களே இனவெறிக்கு காரணமாகும்: ஆனந்தசங்கரி

நாட்டில் முன்னொருபோதும் இல்லாதளவு இனத்துவேஷம் வளர்ந்து செல்கிறது. அமைச்சர்கள் சிலர் காலத்துக்கு காலம் கக்கும் விஷத்தை அரசாங்கம் முதலில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அமைச்சர்களின் கருத்துக்களே இன வெறியை தூண்டுகின்றன என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களை பதவியிறக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கப் பெரியார் ஒருவர் உபதேசித்துள்ளார். தேசப்பற்று குறித்து தெரியாதவர்கள் தேசப்பற்று பற்றி பேசுவது வேடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தந்தை செல்வாவின் சிலை திருமலையில் உடைத்து சேதமாக்கப்பட்டதனைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே ஆனந்தசங்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தந்தை செல்வாவின் சிலை உடைப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இன ஒற்றுமை பற்றி ஓயாமல் குரல் கொடுப்பது அரசின் கபட நாடகங்களில் ஒன்றாகும். முன்பு ஒருபோதுமே இல்லாத அளவுக்கு இன துவேஷம் வளர்ந்து கொண்டே போகிறது. அமைச்சர்கள் சிலர் காலத்துக்குக் காலம் கக்கும் விஷத்தை அரசு முதலில் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அத்தகைய விஷமே சிலரில் ஊறிப் போய் இன வெறியை உருவாக்குகின்றது. இத்தகைய இன வெறியர்களின் செயற்பாடுகள் மறுபுறத்தில் சிலரின் உள்ளத்தில் வெறி உணர்வுகளை ஏற்படுத்துமேயன்றி வேறு எதுவித பிரயோசனத்தையும் ஏற்படுத்தாது.

சமாதானமான சூழ்நிலை இருக்கும் போது துவேஷம் கொண்ட ஒருவன் இத்தகைய ஓர் ஈனச்செயலை நாட்டின் எப்பகுதியிலும் செய்யலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முட்டாள்தனமான இதுபோன்ற செயல்களை நாட்டின் எப்பகுதியிலும் செய்யலாம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களே நாட்டில் அமைதி குறைவதற்குக் காரணமாகும்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கப் பெரியார் ஒருவர் அமெரிக்கா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவியிறக்க வேண்டுமென அரசுக்கு உபதேசித்துள்ளார். தேசப்பற்று என்றால் என்ன என்பதைப் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் தேசப்பற்று பற்றி பேசுவது வேடிக்கையாகும். “தேச வழமை’ என்றால் என்னவென்று தெரியாத அமைச்சர் நாட்டில் மழை பெய்தாலும் தேச வழமையை ஒழிக்க வேண்டும் என்பார். தேச வழமை, கண்டிய சட்டம், இஸ்லாமிய சட்டம் போன்றவை அந்தந்த இன மக்களை சார்ந்தவையாகும். அம்மக்களின் ஒத்தாசையின்றி அவற்றை மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை. பிற மாவட்டத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் காணி வாங்க முடியாது என்பது சிலரின் கற்பனையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply