வெளிநாடு சென்ற கூட்டமைப்பினர் எந்த ஒரு இடத்திலும் தமிழீழம் தொடர்பாக கருத்து வெளியிட்டதில்லை: சித்தார்த்தன்

தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதைத் தடுப்பதற்காகவே பேரினவாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயத்திற்கு இனவாத சாயம் பூசுகின்றனர். இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அக்காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளமை வரலாறாகும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த ஒரு இடத்திலும் தனித் தமிழீழம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டதில்லை.

தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டுக்கு சென்றமை இது முதற்தடவையல்ல. கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதபோது பல தமிழ்த் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். அது மட்டுமல்ல இன்றைய ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் மனித உரிமைகளை மீறுவதாக ஐ.நா சென்று முறையிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல பல்வேறு காலகட்டங்களில் சிங்களத் தலைவர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காததன் காரணமாகவே தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். தீர்வுகள் கிடைக்குமானால் வெளிநாடு சென்று முறையிடும் தேவை ஏற்படாது. ஆனால் பேரினவாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதனை தடுக்கின்றனர். இதனை இவர்கள் கைவிட வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு இவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply