இலங்கையில் செய்தி இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு

இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்த ஒரு இணைய தளமும், இலங்கை அரசிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் அல்லது அது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை அரசு எச்சரித்திருக்கிறது. இலங்கை குறித்த செய்திகளைத் தரும் பல இணைய தளங்களை இலங்கை அதிகாரிகள் தடை செய்த நிலையில் இந்த மிரட்டல் வருகிறது. நாட்டில் இணையத் தணிக்கை செய்வது ஒரு நிலைநிறுத்தப்பட்ட போக்காக இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை அதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது என்று சர்வதேச அளவில் செயல்படும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

குறைந்தது ஆறு இணைய தளங்களை, கடந்த சில நாட்களாகவே, பார்க்க முடியாமல் இலங்கை அரசு தடுத்திருக்கிறது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இணைய தளம், மற்றும் இந்த ஆண்டு முன்னதாக தீ வைக்கப்பட்ட செய்தி நிறுவனத்தின் மற்றுமொரு இணைய தளம் ஆகியவை இதில் அடங்கும்.

ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் குறித்து தரக்குறைவான தனிப்பட்ட விமர்சனத்தில் ஈடுபட்டதால் இந்த இணைய தளங்களை, வாசகர்கள் அணுகுவது தடுக்கப்பட்டது என்று ஊடக அமைச்சகச் செயலர் கூறுகிறார்.

“முட்டாள்தனமானது”இலங்கையைப் பற்றி செய்தி தரும் எந்த ஒரு இணைய தளமும், அது உலகின் எந்தப் பகுதியிலிருந்து இயங்கினாலும, இலங்கையின் ஊடக அமைச்சிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் அல்லது அது சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் லங்கதீபா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்த நிபந்தனை “முட்டாளதனமானது” என்று கூறிய மூத்த எதிர்க்கட்சிப் பிரமுகரான, மங்கள சமரவீர, அரசாங்கம் “பயப்பீதியில்” செயல்படுவதாக வர்ணித்தார்.

இலங்கையில் இணைய தள தணிக்கை என்பதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான இணைய தளமான, தமிழ்நெட், 2007ம் ஆண்டிலிருந்தே ஏறக்குறைய தொடர்ச்சியாக இலங்கை அரசால் தடுக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தை விமர்சித்த பிற இணைய தளங்கள் அவ்வப்போது தடை செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

தாக்குதல்

களத்தில் ஆயுத ரீதியிலான போர் இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டாலும், தமிழ்ப் பிரிவினைவாதத்தில் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் மக்கள் தொடர்பு இயக்கத்தால், பிரச்சாரப்போர் என்பது தொடர்வதாக அரசாங்க ஆதரவாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இணைய தள செய்தியாளர்களும், ஊடகங்களும், இன்னும் இலங்கை அரசால் வன் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்படுவதாகவும், இந்தச் செயல்களைச் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதாகவும் பாரிஸிலிருந்து இயங்கும் “ எல்லைகளற்ற செய்தியாளர்கள்” என்ற ஊடக சுதந்திர அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் இணைய தளங்கள் தணிக்கை செய்யப்படுவதை அனுமதித்ததற்காக, இலங்கையின் இரு பெரும் தொலைபேசிச் சேவை நிறுவனங்களை, இந்த அமைப்பு கடந்த காலங்களில் விமர்சித்திருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply