மன்மோகனுக்கு நேற்று ஜெ கடிதம் மீனவர்கள் மீதான தாக்குதலால் சீற்றம்; இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள் என்று இலங்கை அரசுக்கு எத்தனை தடவை தான் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு’ போன்று பயன் ஏதும் ஏற்படுவதில்லை. எனவே இலங்கை அரசு மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

கடந்த 5ஆம் திகதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சீற்றம் மீண்டும் கடித வடிவில் வெளியாகி உள்ளது. எனினும் தம் மீதான குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படை மறுத்துள்ளது.  இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்திருப்பதாவது:
 
பாக்கு நீரிணைப் பகுதியில், தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை, தமிழக மீனவர்கள் மேற்கொள்ளும்போது இலங்கை கடற்படையினர் மற்றும் கூலிப்படையினர் தினமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த கவலையுடன், இக்கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அதிகாரிகள் தாக்குதல் நடத்துவது, சித்திரவதை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமை பற்றி, ஏற்கனவே தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். சென்னை வந்த, இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மாத்தாயிடமும், நேரடியாக இதுபற்றி விளக்கியிருந்தேன்.

நியூயோர்க்கில், இலங்கை ஜனாதிபதியைத் தாங்கள் சந்தித்தபோது, இது பற்றிக் கவலை தெரிவித்தீர்கள் எனவும் இதுபோன்ற சம்பவங்கள் பற்றி தீவிரமாக விசாரிப்பதாக, இலங்கை அரசு உறுதியளித்தது எனவும், எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் இதுபோன்ற கவலைகள் அனைத்தும், இலங்கை அரசைப் பொறுத்தவரை, செவிடன் காதில் ஊதியது போல, எவ்விதப் பயனையும் அளிக்கவில்லை. கடந்த மே மாதத்தில் இருந்து, இதுவரை, 22 தாக்குதல் சம்பவங்கள், தமிழக மீனவர்கள் மீது நடந்துள்ளன.

 இதில், கடந்த மாதம் 10ஆம் திகதி தங்களுக்கு நான் கடிதம் எழுதிய பின், ஆறு பெரிய தாக்குதல் ஷம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக மீனவர்களைப் பாக்கு நீரிணைப் பகுதியில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை அச்சமூட்டும் திட்டத்துடன், இலங்கைக் கடற்படையினரும், கூலிப்படையினரும் திட்டமிட்டு, ஒரே மாதிரியான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடும் நடவடிக்கை தேவை
 மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்ட பின்பும், வெளியுறவு அமைச்சின் மூலம் முயற்சிகளை மேற்கொண்ட பின்பும், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வதால் தமிழகம் முழுவதும் மீனவ சமுதாயத்தினரிடம் மிகுந்த கவலையும் அசாதாரண சூழ்நிலையும் நிலவி வருகிறது. எனவே, இலங்கை அரசுக்கு எதிராக, கடுமையான நிலையை பிரதமர் எடுக்க வேண்டும்.

மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் தொடரக் கூடாது என, கடுமையான வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம், தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இப்பிரச்னையைத் தமிழகப் பிரச்னையாக ஒதுக்கிவிடாமல், தேசியப் பிரச்னையாகக் கருத வேண்டுமென, ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply