இலங்கை விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மாலைதீவில்ஆரம்பமான சார்க்மாநாடு

தெற்காசிய விவகார ஒத்துழைப்புக்கான (சார்க்) அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு இன்று மாலைதீவின் அட்டு நகரில் ஆரம்பமாகியுள்ளது. அட்டு நகரில் பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டில் சார்க் அமைப்பு நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய எட்டு நாடுகளின் தலைவர்கள் உட்பட அந்நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டின் பாதுகாப்புக்கு இலங்கையிலிருந்து சென்ற விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்படவேணடும்.

இவ்வருடம் நடைபெறும் 17 ஆவது உச்சிமாநாட்டில் ‘அன்னியோன்ய தொடர்புகளை உறுதிப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் தெற்காசியப் பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் விஷேட காரணிகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. மாலைதீவில் மூன்றாவது தடவையாக சார்க் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ,அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்த்தன, அஸ்வர், கமலா ரணதுங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் சென்றுள்ளனர். இம்மாநாட்டுக்கு வருகை தந்துள்ள அனைத்துத்தலைவர்களும் ஏனைய நாட்டுத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலைதீவு புறப்பட்டுள்ளது. அமெரிக்கக் குழு ஒன்று சார்க் உச்சி மாநாட்டில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கு சார்க் உச்சி மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பிளேக் தலைமையில் செல்லும் இந்தக் குழுவினர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply