அரச சுவீகரிப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல திட்டம்

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற புதிய சட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள நிறுவனங்களின் பட்டியலிலிருந்து தனது சீனித் தொழிற்சாலையான செவனகல சுகர் இண்டர்ஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டை விடுவிப்பதற்காக சர்வதேச நீதிமன்றமொன்றுக்கு  செல்லத் திட்டமிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தயா கமகே நேற்று கூறினார்.

மேற்படி சட்டத்தின் கீழ் 37 நிறுவனங்களை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் பட்டியலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சட்டம் குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வரும்வரை தான் காத்திருப்பதாகவும் அதன்பின் சர்வதேச நீதிமன்றுக்கு செல்வது குறித்து தான் தீர்மானிக்கவுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான தயா கமமே கூறினார்.

2002 ஆம் ஆண்டு இத்தொழிற்சாலை தனியார் மயப்படுத்தப்பட்டபோது அதை தான் கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தின்படி 700 ஊழியர்களை மீண்டும் பணிக்குச் சேர்த்ததுடன் 4200 கரும்பு உற்பத்தியாளர்களிடமிருந்து கரும்பை வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் உடன்படிக்கையை மதித்து நடந்தேன். அரசாங்கம் 469 ஹெக்டேயர் நிலத்தை இரு வருடங்களுக்குள் இக்கம்பனிக்கு கொடுப்பதற்கு இணங்கியிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. எனவே நான் நீதிமன்றம் சென்றேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் மாதம்தான் அதில் கையெழுத்திட்டார். நான் ஒப்பந்ததிலுள்ளதை உடனடியாக செய்தபோது அரசாங்கம் அதற்கு 9 வருடங்களை எடுத்துக்கொண்டது” என தயா கமகே கூறினார்.

அதேவேளை, இச்சீனித் தொழிற்சாலை நிறுவனமானது முதலீட்டுச் சபையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் புதன்கிழமை  கூறினார்.

ஜனாதிபதியின் கைகளைத் திருகி மேற்படி காணிகளை அக்கம்பனி பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். நீதித்துறையின் சுயாதீனத்தை ஜனாதிபதி கௌரவிப்பதனால் ஜனாதிபதி அதைச் செய்ததார் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply