மும்பையில் இந்தியப் பொருளாதார மாநாடு
வோர்ல்ட் எகனாமிக் ஃபோரத்தின் இந்திய உச்சிமாநாடு மும்பையில் முதல் முறையாக தற்போது நடக்கிறது. பெரும் தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றோர் இதில் கலந்து கொண்டு ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்துப் பேசியுள்ளனர்.
இண்டியா எகனாமிக் சம்மிட் அதாவது இந்தியப் பொருளாதாரம் குறித்த உச்சிமாநாடு தனது 27 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக டில்லிக்கு வெளியே நடந்துள்ளது.
இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் நிர்வாக ஆட்சி முறை இருபத்தோராவது நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று கூறினார்.
“தற்போது மக்கள் உடனடியாக வேலை நடக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு ஈடுகொடுக்க அரசு முயல வேண்டும். முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆளும் தரப்பும் எதிர்கட்சியும் குறைந்த பட்ச கருத்தொற்றுமை காண வேண்டும்.” என்றும் அம்பானி வலியுறுத்தினார்.
உலகப் பொருளாதாரம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் தொழிலதிபர்கள் விவாதித்தனர்.
ஊழல்
இந்தியாவில் ஊழல் மலிந்து கிடப்பது தொடர்பில் கவலை தெரிவித்து தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ஆசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 15 முன்னணிப் பிரமுகர்கள் எழுதிய கடிதம் குறித்து மத்திய அரசு கோபப்படுவதை விடுத்து, அப்பிரச்சினையை தீர்க்க அரசு முயல வேண்டும்” என்று அப்பானி வலியுறுத்தினார்.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தளர்வடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அடிப்படை கட்டமைப்பு தொடர்பாக புதிய பெரும் திட்டங்கள் துவங்கப்படாதது குறித்து கவலை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சர், இந்திய வங்கிகளின் நலன் குறித்து மோடி மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை சற்றே மிகைப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக 8 முதல் 9 சதவீதம் வரை வளர்ச்சி பெற்ற இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த ஆண்டு ஏழரை சதவீதம் என்ற அளவுக்குத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார சூழல்
உலகப் பொருளாதார சிக்கல்கள் தொடர்ந்தால் அடுத்த ஆண்டில் இந்த வளர்ச்சி மேலும் குறையும் என்ற எச்சரிக்கை குரல்கள் ஏற்கனவே ஒலிக்கத் துவங்கியுள்ளன.
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகள் கடந்த சில வாரங்களாக சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழல் போன்றவற்றின் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி வீதம் ஏற்கனவே குறையத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருவதுடன், ரூபாயின் மதிப்பும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply