தமிழ் மக்களின் அரசியலில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர் சிவதாசன்

முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான எஸ்.சிவதாசன் அவர்கள் இன்று மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த மொழி பெயர்ப்பாளருமாவார்.

தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பதுடன் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டங்கள் மற்றும் பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவர்.

சிவதாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த காலத்தில் தொழிற் சங்கப் பணிகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றியவர். இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இலங்கைப் போக்குவரத்துச் சபை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்றவற்றில் தொழிற்சங்கங்களைக் கட்டியெழுப்பியதுடன் அந்த அமைப்புகளின் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் தொழிலாளர்களது நலன்களுக்காகவும் அயராது போராடியவர்.

இவற்றிற்கும் மேலாக இலங்கைத் தொழில் நீதிமன்றத்தில் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இருந்து தொழில் நீதிமன்றங்களில் வாதாடி தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய காலத்தில் அப்போதைய பிரபல அரசியல் தலைவர்களாக விளங்கிய கலாநிதி எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பீற்றர் கெனமன், கே.பி.சில்வா போன்றோருடனும் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதின் பின்னர் என்.சண்முகதாஸனுடன் இணைந்து பணியாற்றிய சமயம் பிரேம்லால், குமாரசிறி, எஸ்.டி.பண்டாரநாயக்க போன்றவர்களுடனும் இணைந்து பணியாற்றினார்.

அதேசமயம் வடபகுதியில் சகலரது நன்மதிப்பைப் பெற்றிருந்த ஆசிரியர் மு.கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடாத்தியவருமாவார்.

சிவதாசன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டபோது 1986ம் ஆண்டில் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டு மிகவும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நீண்ட காலமாகத் சிறை வைக்கப்பட்டிருந்தார். புலிகளது பிடியிலிருந்து தப்பி வந்த அவர் தனது நெருக்கமான சகாக்களுடன் பல கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு புலிகளது ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களை அணி திரட்டுவதில் தனது உயிரையும் துச்சமென மதித்துச் செயற்பட்டவர்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு வடக்குக் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதிலும் தமிழ் பேசும் மக்களின் இறுதித் தீர்வுக்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் அவசியம் என்பதையும் உணர்ந்து செயலாற்றியவர் என்பதுடன் தோழர் பத்மநாபாவின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகவும் இருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் தேர்வு செய்யப்பட்டதுடன் அக்கட்சியின் முக்கியஸதர்களில் ஒருவராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். பின்னர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவுமிருந்து சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இக்காலகட்டத்தில் கொழும்பில் அவரது வாகனத்தை இலக்கு வைத்து புலிகளால் 2006.08.09 அன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 90இன் நடுப்பகுதியில் தாயகத்தில் கால் பதித்தபோது அவருடன் கூட, சிவதாசன், இலங்கை வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தந்தையாராகிய கதிரவேல் அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த போது சிவதாசன் அவர்களும் இணைந்து பணியாற்றினார். பின்னாளில் கதிரவேல் அவர்களின் சகோதரியை திருமணம் செய்ததன் மூலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

934ம் ஆண்டு கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தில் பிறந்த இவர் இன்று 13.11.2011 காலமனார்.

இவரது பூதவுடல் வைக்கப்பட்ட இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு மலர்மாலை சாத்தி அஞ்சலியை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயரிற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

அமரர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply