கடற்படை கடத்திய தமிழ் மாணவர்களை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனுக்கள்
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கல்வி கற்பதற்காக நாட்டை விட்டுச் செல்லாதிருந்த மாணவரும் ஏனைய ஜீ.சி.ஈ. உயர்தர மாணவர்கள் இருவரும் கடத்தப்பட்டு, கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி அவர்களின் பெற்றோர்கள் தனித்தனியாக 3 ஆள்கொணர்வு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.திருமதி சரோஜா நாகநாதன் தனது மகன் ரஜீவ் நாகநாதனையும் ஜி.விஸ்வநாதன் தனது மகன் பிரதீப்பையும் திருமதி காவேரி ராமலிங்கம் தனது மகன் திலககேஸ்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோரி இம்மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த மாணவர்கள் திருமலை கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தாம் நம்புகின்றனர் எனவும் அவர்களின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுக்களில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ். திசாநாயக்க, பொலிஸ்மா அதிபர் இலங்ககோன், சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ரஜீவ் நாகநாதன் அனுமதிப் பெற்றதையடுத்து அவரின் தந்தை 2008 செப்செப்டம்பர் 17 ஆம் திகதி தனது இல்லத்தில் விருந்தொன்றை ஏற்பாடுசெய்தார் எனவும் ரஜீவின் நண்பர்களான திலகேஸ்வரன், பிரதீப், டிலான் மொஹமட் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் வெளியே சென்ற மேற்குறிப்பிட்ட ரஜீவ், திலகேஸ்வரன், பிரதீப் மூவரும் மறுநாள் 18 ஆம் திகதிவரை வீடுதிரும்பவில்லை எனவும் இதனால் அவர்களின் பெற்றோர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.2009 ஜனவரி மாதம் ரஜீவின் தந்தையை தொலைபேசியில் அழைத்த நபர் தன்னை சந்திம என அடையாளப்படுத்திக்கொண்டு, ரஜீவும் அவரின் நண்பர்களும் மன்னாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களை விடுவிப்பதற்கு 25 லட்சம் ரூபா வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
2009 பெப்ரவரியில் நந்தகுமார் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் தொலைபேசியில் அழைத்து இம்மாணவர்கள் மட்டக்களப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.இந்த மாணவர்கள் ஆரம்பத்தில் கொழும்பு சைத்திய வீதியிலுள்ளது என நம்பப்படும் வீடொன்றில் தடுத்துவைக்கப்பட்டனர் எனவும் பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு மாற்றப்பட்டனர் எனவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும் தடுத்துவைக்கப்பட்டமைக்கும் காரணம் கூறப்படவில்லை எனவும் அவர்கள் கடற்படைச் சட்டத்தின் கீழ் கையாளப்படவோ கடற்படையினால் தடுத்துவைக்கப்படவோ வேண்டியவர்கள் அல்லர் எனவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply