கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு அரசு இணக்கம்

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் அடுத்த மாதம் முதல் விரிவான முறையில் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற இரு தரப்பினருக்கும் இடையிலான 13 வது சுற்றுப்பேச்சுக்கள் சுமூகமானதாக இடம்பெற்றதாகவும், பேச்சுக்களைத் துரிதப்படுத்துவதற்காக அடுத்த மாதத்திலிருந்து மாதத்துக்கு 4 தடவைகளாவது பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான பேச்சுக்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு நீடித்ததாகவும் தெரிவித்த இந்த வட்டாரங்கள், அதிகாரப்பரவலாக்கலில் காணப்படும் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் அடுத்த கட்டப் பேச்சுக்களில் ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள அதேவேளையில், அவ்வாறான விடயங்கள் இன்றைய பேச்சுக்களின் போது அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தன.

மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் இருக்க வேண்டிய அதிகாரங்கள், மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கான நிதி அதிகாரம், ஆளுநருக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் போன்றவற்றுடன், மாகாண அலகு தொடர்பாகவும் அடுத்த கட்டப் பேச்சுக்களின் போது ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேவேளையில் பேச்சுக்களைத் துரிதப்படுத்தும் வகையில் அடுத்த மாதத்தில் நான்கு தடவைகளாவது சந்தித்துப் பேசுவதற்கும் இன்றைய பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

இன்றைய பேச்சுக்களுக்கு அரசு தரப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சஜித் வாஸ் குணவர்த்தன, பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். _

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply