இந்தியா தேடிய புலிகளின் அடுத்த ‘தலைவர்’

ராஜீவ் காந்தியின் கொலைக்கான பழியை ஒப்புக்கொண்டு, ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கினால் மட்டுமே போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்ற தொனிப்பொருளுடன் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஊடாகவும், உருத்திரகுமாரனின் நண்பரான ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன் வாயிலாகவும் நிபந்தனை விதித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்த செய்திகளின் தொடர்ச்சியாக, 28.11.2008 அன்று நியூயோர்க்கில் உள்ள இந்திய உப தூதரக வளாகத்தில் மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களை இந்திய தூதரகத்தின் இராசதந்திரிகளில் ஒருவரான எஸ்.பி.சிங் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்தியாவின் உளவு அமைப்பான றோ நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும், உருத்திரகுமாரனுக்கும் இடையில் காதும்காதும் வைத்தாற் போன்று நியூயோர்க்கில் நடைபெற்ற இரகசியச் சந்திப்பின் தொடர்ச்சியாகவே இக்கலந்துரையாடல் நிகழ்ந்தேறியிருந்தது. இவ் இரகசிய சந்திப்பு தொடர்பாக மருத்துவர் ஜெயலிங்கம் அறிந்திருக்கவில்லை.

இதனை உறுதிசெய்யும் வகையில் இக்கலந்துரையாடல் தொடர்பாக மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களுக்கு எஸ்.பி.சிங் அனுப்பிய மின்னஞ்சல் அழைப்பு அமைந்திருந்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவ் அழைப்பின் தமிழ்வடிவம் பின்வருமாறு:

“அன்புள்ள மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களுக்கு,

நான் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஓர் இந்திய இராசதந்திரி. உங்களுக்கு வசதியான நாள் ஒன்றில் உங்களைச் சந்திப்பதற்கு நான் விரும்புகின்றேன். தமிழர் போராட்டத்தில் உங்களின் பணிகள் தொடர்பாக ஓரளவுக்கு நாம் அறிந்து வைத்திருப்பதோடு, இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதையிட்டும், அவர்கள் எதிர் நோக்கும் துயரங்கள் தொடர்பாகவும் இந்தியாவில் உள்ள எம்மவர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்கள்.

கடந்த காலத்தில் எமக்கிடையே வேறுபாடுகள் நிலவியிருந்தாலும், இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியாவிற்கும் இடையில் நிலவும் இனத்துவ – ஆன்மீக ரீதியிலான உறவு என்பது புறந்தள்ளப்பட முடியாதது. பொதுவான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நிமித்தம் என்னை சந்திப்பதற்கு தயாராக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நியூயோர்க் நகருக்குள் நீங்கள் வருவதுண்டா? உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன்”

2008 நவம்பர் மாத நடுப்பகுதியில் எழுதப்பட்ட இம் மின்னஞ்சல் செய்தியைத் தொடர்ந்து மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களுக்கும், இந்திய இராசதந்திரியான எஸ்.பி.சிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 21.11.2008 அன்று நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பொழுதும், எவ்வித காரணங்களும் கூறப்படாது திடீரென இச்சந்திப்பு பிற்போடப்பட்டு பின்னர் 28.11.2008 அன்று நிகழ்ந்தேறியது.

ஒரு வகையில் இச்சந்திப்பிற்கான அழைப்பு மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பொழுது நிலவிய அரசியல் சூழல், மும்பைத் தாக்குதல்கள், மற்றும் 27.11.2008 அன்று தமிழீழ தேசியத் தலைவர் ஆற்றிய மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை போன்றவற்றால் தடுமாற்றத்திற்கு ஆளாகியிருந்தது என்றே கூறவேண்டும்.

அதாவது இந்தியப் பேரரசை தமிழீழத்தின் நட்பு நாடாக விழித்து தமிழீழ தேசியத் தலைவர் நீட்டிய நேசக்கரம் என்பது போர்நிறுத்தம் தொடர்பாக இந்தியா விதித்த நிபந்தனைகளின் நியாயத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியிருந்ததோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சிய உறுதியையும் ஐயம் திரிபு இன்றி வெளிப்படுத்தியது. இதனை நிரூபணம் செய்யும் வகையில் அமைந்திருந்த தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையின் சில பகுதிகளை இங்கு பதிவு செய்கின்றோம்:

“எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்
கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்துநிற்கிறோம். எம்மைத் தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கிஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்துவருகின்ற இந்தக் காலமாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்துவிட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச்சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.”

அதாவது கடந்தகால ‘துன்பியல்’ நிகழ்வுகளால் ஏற்பட்ட பகைமையைப் புறந்தள்ளிவிட்டு காலமாற்றத்திற்கு ஏற்ப தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு இந்தியா முன்வர வேண்டும் என்பதே பாரத தேசத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் நீட்டிய நேசக்கரச் செய்தியின் சாராம்சமாக அமைந்திருந்தது. இதுவே போர்நிறுத்தத்திற்குத் தனது பின்கதவுகள் ஊடாக இந்தியா விதித்த நிபந்தனைகளுக்கு வைத்த ‘ஆப்பாக’வும் அமைந்தது.

இதன் காரணமாக 28.11.2008 அன்று மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விரு நிபந்தனைகள் தொடர்பாக உரையாடுவதை எஸ்.பி.சிங் அவர்கள் தவிர்த்திருந்தார். அதேநேரத்தில் இச்சந்திப்பில் தமிழீழ தேசியத் தலைவருக்குப் பின்னர் இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்துவதற்கு தகுதி வாய்ந்த ‘இரண்டாவது தலைவர்’ தொடர்பாக தமிழ் மக்களிடையே இருக்கக்கூடிய எதிர்பார்ப்புக்களையும், புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் ‘தலைவராக’ உருத்திரகுமாரன் பரிணமிப்பதற்கான ஏது
நிலைகளையும் நாடிபிடித்துப் பார்ப்பதிலும் எஸ்.பி.சிங் அவர்கள் குறியாக இருந்தார்.

இதனை நிரூபணம் செய்யும் வகையில் தனக்கும், எஸ்.பி.சிங் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புத் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் அவர்களுக்கு மருத்துவர் ஜெயலிங்கம் அவர்கள் அனுப்பிய அறிக்கையை இங்கு முழுமையாகப் பதிவு செய்கின்றோம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவ்வறிக்கையின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது:

“நியூயோர்க்கில் உள்ள உப தூதரகத்தில் இந்திய இராசதந்திரியுடன் நடைபெற்ற சந்திப்பு – நவம்பர் 28, 2008

இந்திய உப தூதரகத்தில் 28 நவம்பர் அன்று இவரை நான் சந்தித்தேன். கேரளாவைச் சேர்ந்த நாற்பது தொடக்கம் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இவர் தன்னை ஓர் இளநிலை இராசதந்திரியாக அறிமுகம் செய்து கொண்டார். மிகவும் வெளிப்படையாகவும், உண்மையாகவும், நட்புறவுடனும் இவர் நடந்து கொண்டார்.

இந்தியாவிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளுமாறு உலகெங்கும் உள்ள இராசதந்திரிகளுக்கு டில்லியிலிருந்து பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக இவர் தெரிவித்தார். இதன் பின்னர் வன்னி நிலவரம் தொடர்பாக இந்தியா மிகவும் கவலை அடைந்திருப்பதாக இவர் தெரிவித்தார். வன்னியை சிறீலங்கா இராணுவம் முற்றுகையிட்டுள்ளமை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்புக்கள், ஆட்பற்றாக்குறை பற்றிக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் சிறீலங்கா அரசாங்கம் தீர்வை வழங்கப் போவதில்லை என்றும், இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை டில்லி விரும்பவில்லை என்றும் கூறினார்.

இதன் பின்னர் எனது கவலை என்ன என்று வினவினார். தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் இடம்
பெயர்வதும், வான்வழிக் குண்டுவீச்சுக்கு ஆளாவதும், உணவு, மருந்து, இருப்பிடம் போன்றவை இன்றி துன்புறுவதுமே எனது கவலை என்று பதிலளித்தேன். வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனிதநேய உதவிகள் பற்றிக் குறிப்பிட்ட இவர், இதில் ஒரு பகுதி மட்டுமே மக்களை சென்றடைந்ததாகவும், ஏனையவற்றை சிறீலங்கா அரசாங்கம் முடக்கி வைத்திருப்பதாகவும், இதனால் அரசாங்கத்தை நம்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியின் கொலையால் ஏற்பட அனுபவம் காரணமாகவும், விரைவில் தேர்தல்கள் நடைபெற இருப்பதாலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கோ அன்றி அவர்களை ஆதரிக்கவோ முடியாத நிலையில் இந்தியா இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் இந்தியாவிடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றீர்கள் என்று என்னிடம் வினவினார்.

அதற்கு பின்வருமாறு நான் பதிலளித்தேன்:

1) ‘சிறீலங்காவிற்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா நிறுத்த வேண்டும். இந்தியாவை எமது தாய்நாடாகப் பார்க்கும் வலுவான பின்னணியைக் கொண்டவர்களாக நாம் விளங்குவதோடு, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி போன்றோர் இறந்த பொழுது அவர்களையும் எமது தலைவர்களாகக் கருதி அவர்களின் மறைவையட்டிக் கவலையுற்று, மகாத்மா காந்திக்கு வடகிழக்கில் சிலை அமைத்தோம். அப்படிப்பட்ட எமது மக்களை சிறீலங்கா படைகள் கொல்வதற்கு இப்பொழுது இந்தியா இராணுவ உதவிகளை வழங்குவதையிட்டு நாம் கவலையடைகின்றோம்’ என்று கூறினேன்.

அதற்கு பதிலளித்த அவர், சிறீலங்கா அரசாங்கத்திற்கு தாங்கள் உதவிபுரியாது விட்டால் சீனா, பாகிஸ்தான் போன்றவற்றின் உதவியை அது பெற்றுக்கொள்ளும் என்றும், தமது தேசிய பாதுகாப்பிற்கு விரோதமாக சிறீலங்காவில் இவ்விரு நாடுகளும் காலுன்றுவதை இந்தியா விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்படியாயின் ‘பிராந்திய வல்லரசாக விளங்கும் நீங்களும், மேற்குலக அரசுகளும் சிறிய நாடாக விளங்கும் சிறீலங்காவின் மிரட்டல்களுக்குப் பணிந்து விட்டீர்கள்’ என்று நான் பதிலளித்தேன். இதனை ஒப்புக்கொண்ட அவர், இந்தியாவை மிகவும் நுட்பமாக பசில் ராஜபக்ச மிரட்டுவதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழ் மக்களைக் கொல்வற்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே வான்படைக்கான உபகரணங்களையும், சில பயிற்சிகளையும் ராடர் கருவிகளையும் சிறீலங்காவிற்கு இந்தியா வழங்கியதாகக் கூறினார். இதனை நான் நிராகரித்ததோடு, இவை தமிழர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டினேன். இதற்குப் பதிலளித்த அவர், சிறீலங்கா அரசாங்கத்தை நம்ப முடியாது என்று குறிப்பிட்டார்.

2) ‘தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் மூலம் அவர்களுடன் எந்தவொரு தொடர்பாடலையும் பேண முடியாத நிலையில் இந்தியா உள்ளது. இத்தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்ப்பதோடு, இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதற்கான விருப்பத்தைத் தனது மாவீரர் நாள் உரையில் தலைவர் வெளியிட்டுள்ளார்’ என்று நான் கூறினேன்.

இதற்குப் பதிலளித்த அவர், கடந்த கால கசப்புணர்வுகள் காரணமாகவும், தேர்தல்கள் விரைவில் நடைபெற இருப்பதாலும், ஏனைய அரசியல் காரணங்களாலும் அது கடினமான விடயம் என்று மீண்டும் தெரிவித்தார்.

3)’தமிழர்களின் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் போராட்டத்திற்கு சாதகமாக சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும்’ என்று நான் அவரிடம் வலியுறுத்தினேன்.

மனித உரிமைகள் தொடர்பாக தத்தமது நாடுகளின் அரசாங்கங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோரிடையே புலம்பெயர்ந்த தமிழர்கள் பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறிய அவர், இதுபற்றி ஏனைய நாடுகளும், அமைப்புக்களும் பேசத்தொடங்கி முன்னிலைப்படுத்தினால் இதுவிடயத்தில் இந்தியா தலையிடுவதற்கும், வல்லரசுகளுடன் பேசுவதற்கும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்று அவர் கூறினார்.

‘திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவருக்கு நிகரான ஆற்றலுடைய எவராவது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கின்றார்களா?’ என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு ‘இங்கு ருத்ரகுமாரன் இருக்கின்றார்’ என்று நான் கூறினேன். இதற்குப் பதிலளித்த அவர், தான் ருத்ரகுமாரனுடன் பேச விரும்புவதாகவும், ஆனால் அதற்கு முன்னர் டில்லியின் அனுமதி தேவை என்றும் தெரிவித்தார்.

டில்லியில் உள்ள தமது மேலிட ஆட்கள் புலம்பெயர் தேசங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுடன் பேச விரும்புவதாகவும், நான் மீண்டும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் பட்சத்தில் என்னைத் தனது மேலிடத்து ஆட்களுடன் தொடர்புபடுத்துவதற்கு தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அது பற்றி அவரிடம் பின்னர் தெரிவிப்பதாகக் கூறினேன். அவர் ருத்ரகுமாரனுடன் பேசுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். தான் சில இலங்கைத் தமிழர்களுடன் பேசியதாகவும், ‘அவர்கள் ஏன் ஒற்றுமையின்றி இருக்கின்றார்கள்?’ என்றும் அவர் என்னிடம் கேட்டார். அவர் குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் ஞானக்கோன். ‘பிழையான ஆட்களுடன் நீங்கள் பேசுகின்றீர்கள்’ என்று நான் பதிலளித்தேன். ‘நான் அறிந்தவரை அமெரிக்காவில் உள்ள 80-85 விகிதமான தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதோடு, அவர்களையே தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாகக் கருதுகின்றார்கள்’ என்றும் நான் கூறினேன்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரித்தானியா, ரொறன்ரோ ஆகிய இடங்களில் பெரும் எண்ணிக்கையில் மாவீரர் நாளில் தமிழர்கள் கூடியமையை நான் சுட்டிக் காட்டினேன்.
‘தலைவருக்குப் பின்னர் இயக்கத்தில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர் யார்?’ என்று என்னிடம் திரும்பத் திரும்ப அவர் வினவினார். அதுபற்றி எனக்குத் தெரியாது என்று நான் பதிலளித்தேன் (இதுபற்றி பரந்தாமன் விளங்கப்படுத்துவார்).

கருணாவை ஏன் மீண்டும் ராஜபக்ச கொண்டுவந்தார் என்று என்னிடம் கேட்டார். ‘உண்மையான காரணம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிள்ளையானையும், டக்ளசையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவ்வாறு செய்திருக்கலாம்’ என்று நான் பதிலளித்தேன். சாராம்சத்தில் இவ்விடயங்கள் பற்றியே நாம் உரையாடினோம். மறுநாள் எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய இவர், தன்னை சந்தித்தமைக்கு நன்றிகூறியதோடு, தன்னோடு அடிக்கடி தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.

அத்தோடு தன்னை சந்திப்பதற்கு ருத்ரா தயாராக இருக்கின்றாரா? என்றும் என்னிடம் கேட்டார். இன்று திடீரென எனது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இவர் ருத்ராவின் தொலைபேசி இலக்கத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். கதைக்கப்பட்ட விடயங்களில் எல்லாவற்றையும் குறிப்பிட்டுள்ளேன் என்று நம்புகின்றேன். ஏதாவது விடயங்களைத் தவறவிட்டிருந்தால் மீண்டும் தெரியப்படுத்துகின்றேன்.”

தமிழீழ தேசியத் தலைவருக்குப் பதிலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் புதிய தலைவர் ஒருவரை உருவாக்குவதிலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் ‘தலைவராக’ உருத்திரகுமாரனை பரிணமிக்க வைப்பதிலும் இந்தியா கொண்டிருந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துக்களை இந்திய இராசதந்திரியான எஸ்.பி.சிங் அவர்கள் வெளிப்படுத்தியதை புலித்தேவன் அவர்களுக்கு மருத்துவர் ஜெயலிங்கம் அவர்கள் எழுதிய அறிக்கை பட்டவர்த்தனமாக்கியது எனக்கூறின் அது மிகையில்லை.

இதனை உறுதிசெய்யும் வகையில் 08.12.2008 அன்று உருத்திரகுமாரனுக்கும், எஸ்.பி.சிங் அவர்களுக்கும் இடையில் நியூயோர்க்கில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதற்கு முன்னர் 04.12.2008 அன்று உருத்திரகுமாரனால் மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கத் தீர்வுக்கான முன்மொழிவைக் கொண்ட அறிக்கை வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ் அறிக்கையின் முழு வடிவம் அடுத்த இதழில் வெளிக்கொணரப்படும்.

(தொடரும்)

– சேரமான்
(பதிவு இணையம்)

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply