நேட்டோ மற்றும் ‘றோ’விடமிருந்து புலனாய்வுத் தகவல்கள்

நோட்டோ கூட்டுப்படை மற்றும் றோ எனும் இந்திய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றிடமிருந்து புலனாய்வுத் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை யுத்தம் தொடர்பில் இவ்வாறு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிபடப்படுகிறது.சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேட்டோ மற்றும் றோ ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நோர்வே தலைமையிலான இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு சர்வதேச புலனாய்வு அமைப்புக்களிடமிருந்து புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தமொன்றுக்கு தயாராவது குறித்த தகவல்களை சர்வதேச புலனாய்வு அமைப்புக்களினால் கண்டு பிடிக்க முடியவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமாதான முனைப்புக்களை மேற்கொண்ட தரப்பினர் புலிகளின் யுத்த முனைப்பு குறித்து பாரா முகமாக செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேட்டோ மற்றும் றோ ஆகியவற்றிடம் புலனாய்வுத் தகவல்கள் பெற்றுக் கொண்டதனை நோர்வே ஒப்புக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமாதான முனைப்புக்களில் ஏற்பட்ட தோல்வியே நோர்வே அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது என பாதுகாப்புச் செயலளார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சமாதான முனைப்புக்கள் தோல்வியடைந்தமை சர்வதேச நாடுகளுக்கு ஓர் பாடமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் தவறில்லை எனவும், அவர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு முன்வைப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இன்னமும் சில சர்வதேச சக்திகள் பயங்கரவாதிகளுடன் அரசியல் நடத்த முடியும் என கருதுவது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply