கூட்டமைப்பின் சரியான வழிமுறைக்கு ஈபிடிபி ஆதரவு

மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச தரப்புடன் காலங்கடந்தாவது பேசத் தொடங்கியிருப்பதில் உண்மைத் தன்மை இருக்குமாயின், அதுவே ஆக்கபூர்வமான வழிமுறை என்றும் ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு கடந்த காலங்களை போலன்றி பிரச்சினைக்கு தீர்வு காணும் உண்மையான விருப்பங்களோடு அரசாங்கத்துடன் பேசுவார்களேயானால் அதை நாம் நிச்சயம் வரவேற்போம் என்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு மாகாணங்களுக்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைகளை முழுமையாக பெற முடிந்த இலக்கு நோக்கி சொல்ல முடியும் என்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியாகிய நாம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

இவ்வாறான நடைமுறைக்கு சாத்தியமானதொரு வழிமுறையினை நாம் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வரும் வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பலரும் எமது கோரிக்கை என்பது அரை குறைத் தீர்வு என்றும் அதை ஏற்க முடியாது என்றும் கூறி நடை முறைக்கு சாத்தியமாகாத கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக நீடித்து செல்வதற்கு வழி கோலியிருந்தனர்.

ஆனாலும் நாம் பலத்த சவால்களையும் திட்டமிட்டு பரப்பப்பட்ட எம்மீதான அவதூறுகளையும் வசைகளையும் தாங்கியபடி தொடர்ந்தும் எமது கோரிக்கையினை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்ததினால் இன்று அரசாங்கம் எமது கோரிக்கையினை நிறைவேற்ற விருப்பம் கொண்டு செயலாற்றவும் தொடங்கி விட்டது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் வெறுமனே அறிக்கை விட்டுக்காலம் தள்ளும் அரசியலையே தொடர்ந்தும் முன்னெடுக்காமல் பார்வையாளர்களாக இன்றி பங்காளிகளாகவும் எமது நிலைப்பாட்டை ஏற்று ஓடுகின்ற அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயலாற்ற வந்திருப்பதில் உண்மைத்தன்மை இருக்குமாயின் அதை நாம் வரவேற்போம்.

இதேவேளை கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை தவறான வழிமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றிருந்தாலும் அவர்கள் பெற்ற அரசியல் பலத்தால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பமும் அவர்களிடமே இருந்தது. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைச்சாத்தியமான எமது வழிமுறையை இன்று காலங்கடந்தாவது ஏற்றுக்கொண்டிருப்பது போல் அன்று ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால் தமிழ் மக்கள் இத்தனை அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நடந்திருக்காது.

ஆகவே இதுவரை விட்ட தவறுகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுபடவேண்டுமேயானால் இன்று மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் குறித்து அரசுடன் பேசி வரும் விடயத்தில் தீர்வு காணும் வரை பேசி தமது உண்மைத்தன்மையை மெய்ப்பித்தும் காட்ட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சியின் அறிக்கையில்
யாருடைய வருகைக்காகவும் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் காத்திருக்காது என்றும் எமது நடை முறை சார்ந்த அரசியல் வழிமுறையை ஏற்று வருபவர்கள் தமிழ் பேசும் மக்களின் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு பங்களித்தவர்கள் ஆவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply