அணுசக்திக்கு உதவும் அமெ. நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும் : மன்மோகன்
இந்தியாவுக்கு அணு சக்திக்கான மூலப்பொருள்களை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களின் அச்சங்கள் நீக்கப்படும். அணு விபத்து இழப்பீடு தொடர்பான சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் 30 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஆசியான், கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இந்தோனேசியா சென்றுள்ளார். மாநாட்டில் பங்கேற்க அங்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று வெள்ளிக்கிழமை அவர் சந்தித்தார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்திய-அமெரிக்க உறவு, அணு விபத்து இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங்,
அணு விபத்து இழப்பீடு வழங்கும் விடயத்தில் அமெரிக்க நிறுவனங்களின் கவலைகள் சட்டத்துக்கு உட்பட்டுப் பேசித் தீர்க்கப்படும்.
இது தொடர்பாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் 30 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும். அணு விபத்து இழப்பீடு பிரச்சினை தொடர்பாக ஒபாமாவுக்கு உறுதியளித்துள்ளேன்.
கடந்த ஓராண்டில் நாம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளோம். அமெரிக்க – இந்திய தரப்பு முதலீடு, ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் உறவு வலுவடைந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்தியாவில் அணு உலை அமைக்க வழங்கும் கருவிகள், மூலப்பொருள்கள் உள்ளிட்டவைகளில் உத்தரவாதம் அளித்துள்ள காலத்துக்குப்பின் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்நிறுவனங்கள் எவ்விதப் பொறுப்பும் ஏற்காது என்பதே இப்போதைய அணுவிபத்து இழப்பீட்டு விதியாக உள்ளது.
ஆனால் அணு உலையின் ஆயுட்காலம் முழுவதற்கும் அந்த நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது இந்தியாவின் முந்தைய பரிந்துரையாக இருந்தது” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply