மீள்குடியேற்றமின்றி அவதியுறும் புதுக்குடியிருப்பு மக்கள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னும் முற்றுப் பெறாத போதிலும், அங்குள்ள இரண்டு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கென தேர்தல் திணைக்களம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியை தற்காலிகமாக குறித்திருக்கின்றது. கடந்த ஜுலை மாதம் வடமாகாணத்தில் 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஆயினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முற்றுப்பெறாத காரணத்தினால் அங்கு தேர்தல் நடத்துவதைத் தேர்தல் திணைக்களம் பிற்போட்டிருந்தது.
இன்னும் வழமைக்குத் திரும்பாத புதுக்குடியிருப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 44 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டதாகவும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இன்னும் தங்கியுள்ள 7500 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள இரண்டு இடங்களில் ஒன்றாகிய புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இன்னும் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.

இந்த நகரை அண்டிய சில பகுதிகளில் மட்டுமே மீள்குடியேற்றம் நடைபெற்றிருக்கின்றது. அந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தினால் புதுக்குடியிருப்பு நகரமும் பாழடைந்து கிடக்கின்றது. அது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இதனால் கோம்பாவில் பகுதியில் கொட்டில்களிலும் வீதியோரக் குடிசைகளிலுமே கடை வியாபாரம் நடைபெற்று வருகின்றது.

இந்த மக்களின் குறைகளைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சிவராஜசிங்கம் ஜெயகாந்த் தெரிவிக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி மோதல்கள் இடம்பெற்ற சுமார் பத்து கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தாமதமடைந்திருப்பதனால், அங்கு மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அத்துடன் இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களைத் தற்காலிகமாக கோம்பாவில் கிராமத்தை அடுத்துள்ள திம்பிலி என்ற இடத்தில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பகுதியில் டிசம்பர் மாத முற்பகுதியில் 100 குடும்பங்கள் முதற்கட்டமாக குடியேற்றப்படவுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை டிசம்பர் மாதத்தில் நடத்துவதென்பது தேர்தல் திணைக்களத்திற்கு சவாலான காரியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply