கிழக்கு முதலமைச்சராக ஒரு முஸ்லிம் வருவதை அனுமதியோம்: ஈரோஸ் பிரபாகரன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தமிழ் இனத்தை பேரினவாதிகளுக்கு விற்றுவிட்டார் என்றும் கிழக்கு மாகாணத்தில் இனிமேல் முஸ்லீம் ஒருவரே முதலமைச்சராக வருவதற்காக தமிழ் இனத்தை பேரினவாதிகளுக்கு விற்று விட்டார் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஈரோஸ் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தல் சம்பந்தமான கருத்தரங்கில் தலைமைதாங்கி உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீக தாயகம் எமது இந்த தாயக பூமிக்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தம் வீண் போகக் கூடாது. எம்மை நாமே ஆள வேண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சராக ஒரு தமிழ் மகன்தான் வரவேண்டும் இதை விடுத்து ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வருவதை எமது கட்சி ஒரு போதும் அனுமதிக்காது.

தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்காக எமது கட்சி எந்தக் கட்சியுடனும் சேர்ந்து செயற்படத் தயாராக உள்ளது. தற்போதுள்ள கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பிள்ளையான் தமிழ் மக்களை பேரினவாதிகளுக்கு விற்று விட்டார். தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்ததற்காக அரசாங்கம் அவருக்கு கொடுத்த பரிசுதான் முதலமைச்சர் பதவி.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது வயிற்றுப் பிளைப்பிற்காக அரசின் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு மறைமுகமாக ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கப் பார்க்கின்றது ஆனால் எமது ஈரோஸ் கட்சி அரசுடன் சேர்ந்துகொண்டு தமிழ் மக்களுக்கு விரோதமாக ஒருபோதும் செயற்படாது.

எமது ஈரோஸ் கட்சியில் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளால் முதன் முதலாக பாராளுமன்றம் சென்ற தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் கட்சியில் உள்ள அமைச்சர் பசீர் சேகுதாவூத் கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக ஒரு முஸ்லிம் வரவேண்டும் என அறிக்கை விடுகின்றார்.

இவர் பாராளுமன்றம் செல்வதற்கான பாதையைக் காட்டியவர்களே தமிழர்கள்தான் என்பதை இவர் மறந்துவிட்டார். கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் இவர் ஈரோஸ் கட்சியில் இருந்ததற்காக தமிழ் மக்கள் இவருக்கு வாக்களித்து இருக்கிறார்கள் ஆனால் தற்போது இவர் தமிழ் மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

அன்பான தமிழ் மக்களே எமது இந்த ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற ஈரோஸ் கட்சியை நான் இன்று தமிழ் மக்களிடம் ஒப்படைக்கின்றேன் சிறந்த ஒரு தலைமையை உருவாக்கி சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply