ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு பிரித்தானியா கோரிக்கை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தினை பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் அஸ்றைர் பேர்ட் கோரியுள்ளார்.

2002 முதல் 2009 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்கக் குழு தயாரித்த 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரித்தானிய அமைச்சர்,

முரண்பாட்டிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் வாய்ப்பாகவே இந்த அறிக்கை பலராலும் நம்பப்படுகின்றது. எனவே இது தேசிய நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கவேண்டிய உறுதிப்பாட்டினை வெளிக்காட்டுவதற்குரிய முக்கிய வாய்ப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே அறிக்கையினைப் பகிரங்கப்படுத்துவது அந்த உறுதிப்பாட்டின் முக்கிய பகுதியாகும். எனவே அறிக்கை சார்ந்து பொறுப்புடன் கூடிய நகர்வுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்குமென கேட்டுக்கொள்வதாக பிரித்தானிய அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இது பகிரங்கமாக வெளியிடப்படாது என்றே பலராலும் நம்பப்பட்டு வருகின்ற நிலையில் இதனை விரைந்து வெளியிடுமாறு பல்வேறு தரப்பாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை தொடர்பாக தொடர்ச்சியாக சந்தேகம் தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply