ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமுல்படுத்தாது: விக்கிரமபாகு

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
போர்க்குற்றம் இழைத்தோருக்குக் கடும் தண்டனை என்ற போர்வையில் அவர்களை அனுசரிப்பதற்கு அரசு முயலுமே தவிர, தண்டனை என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். கறைபடிந்த வரலாற்றுக்கு வெள்ளையடிக்கும் மஹிந்த அரசின் தந்திரங்களுள் முக்கியமானதொன்று தான் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேசத்தின் கேள்விகளுக்குப் பதில் உண்டு என்றும், அந்த அறிக்கையை தாம் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அரச தரப்பினர் அங்கும் இங்கும் கூறித்திரிகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கடும் எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாகவே அரசு சர்வதேசத்தின் கேள்விகளுக்கு ஆணைக்குழு அறிக்கையில் பதில் அளித்துள்ளது.

எனினும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒரு போதும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாது. இந்தியாவையும், அமெரிக்காவையும் திருப்திப்படுத்தவே அரசு அறிக்கை தயாரித்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக்கான நிவாரணம் இதில் இல்லை.

அரசின் இன்றைய செயற்பாடுகள் சர்வதேசத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு அமையவே இருக்கின்றன. வரவு செலவுத்திட்டம் கூட இந்தியா, அமெரிக்கா, உலக வங்கி ஆகியவற்றின் ஆலோசனைக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply