வெளிநாட்டு தமிழர்கள் வடக்கு அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முடியும்
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கு பெருமளவில் பங்களிப்புச் செய்ய முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
“வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும் அங்கு வாழும் எமது மக்களுக்கு உதவுவதற்கும் நாம் பல பணிகளை ஆற்றி வருகின்றோம். வடபகுதி மக்களுக்கு பொழுது போக்கு அம்சங்களை வழங்க வேண்டியுள்ளது. அது மாத்திரமல்ல விளையாட்டு, ஓய்வு நேர பொழுது போக்கு என்பவற்றிற்கு அதிகளவில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதோடு அதிகளவில் ஹோட்டல்களையும் நிர்மாணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதன் பொருட்டு தனியார் துறையினரும் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் செயலூக்கத்தோடு செயற்பட முடியும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்; வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழ் மக்கள் இலங்கை மீதும் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிவர்களாக இருக்கின்றார்கள் என்றும் அவர்கள் இலங்கைக்கு வந்து தமது நேசக் கரங்களை நீட்ட வேண்டிய தருணம் இதுதான் என்றும் குறிப்பிட்டார். இலங்கை தமிழ் வர்த்தகர் ஒருவர் தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு ஹெலிக்கொப்டர் சேவையொன்றை ஆரம்பித்துள்ளார் என குறிப்பிட்ட ஜனாதிபதி வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழ்மக்கள் இது போன்று பல சேவைகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
“மக்கள் சுதந்திரமாக தாம் விரும்பியவாறு இப்பொழுது யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியும்” என ஜனாதிபதி கூறினார். கொழும்பையும் காலியையும் இணைக்கும் இலங்கையின் முதலாவது அதிவேகப் பாதையை கடந்த வாரம் திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், கொழும்பையும் யாழ்ப்பாணத் தையும் இணைக்கின்ற அதிவேகப் பாதைக்கான முன்னெடுப்புகளையும் ஆரம்பித்துள்ளார். “நான் யாழ்ப்பாண அதிவேகப் பாதைக்கான நடவடிக்கையை எடுப்பேன். அதன் மூலம் பிரயாண நேரத்தில் மூன்று மணித்தியாலத்தை குறைத்துக் கொள்ள முடியும்” இவ்வாறு ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply