ஹிலாரி கிளிண்டனின் பர்மிய விஜயம்
அடக்கு முறை ஆட்சிக்கு உட்பட்டு உலகின் ஏனைய நாடுகளால் இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பர்மாவுக்கான அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனின் விஜமானது சரித்திர முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலர் ஒருவர் பர்மாவுக்கு விஜயம் செய்வது இதுதான் முதல் தடவையாகும்.
கடுமையான தடைகளை முகங்கொடுக்கின்ற இந்த நாட்டுக்கு இந்த தசாப்தத்தில் ஒரு வெளிநாட்டு உயர் தலைவர் செல்வதும் இதுதான் முதல் தடவையாகும்.
முன்னாள் இராணுவ ஆட்சியாளர்களில் சிலரையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பர்மாவின் புதிய சிவிலியன் அரசாங்கம் சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றில் நாட்டின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூ சி உடனான பேச்சுவார்த்தைகளும் அடங்குகின்றன.
”பர்மாவில் சிறிய ஒளிக்கீற்றுகள் போன்று தென்படுகின்ற சீரமைப்பு நடவடிக்கைகள், யதார்த்தமான மாற்றமாக பரிமளிக்கும்” என்று தான் எதிர்பார்ப்பதாக ஹிலாரி கிளிண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்புகளை நோக்கியதாக அண்மையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தாம் ஆதரிப்பதாக பர்மிய அதிபரிடம் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
பர்மிய அரசாங்க தலைவர்கள் பலருடனும் அவர் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துகிறார்.
எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூ சியுடன் ஒரு தனிப்பட்ட இரவு உணவு விருந்தில் கலந்து கொள்வதற்காக அவர், இன்று மாலையில் ரங்கூன் செல்லவிருந்தார்.
அமெரிக்க- பர்மிய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை திறப்பதற்கான பாதையில் ஹிலாரி கிளிண்டனின் விஜயம் ஒரு மைல் கல் என்று பர்மிய அதிபர் தெயின் சென் கூறியுள்ளார்.
இந்தக் கருத்து கொஞ்சம் அளவுக்கு அதிகமான ஆவலாகக் கூட இருக்கலாம், ஆனால் இந்த விஜயம் இந்த இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகம் எதுவும் கிடையாது.
பர்மாவில் தற்போது ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை முதலில் அலச உள்ள ஹிலாரி அவர்கள், அதன் மூலம், மேலும் மறுசீரமைப்புக்கான ஊக்கத்தை கொடுக்க முயலுவார்.
குறிப்பாக அரசியல் கைதிகளின் விவகாரத்தை முன்னிலைப்படுத்த விரும்பும் அவர், இனச் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதாக ஒரு தேசிய நல்லிணக்கத்துக்கும் வலியுறுத்துவார்.
தம் பங்குக்கு இராணுவ ஆதரவுடனான அரசாங்கத்தில் உள்ள மறுசீரமைப்பாளர்கள், மேற்குலகில் புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ள விளைவார்கள்.
அதிகரித்து வரும் சீனாவில் செல்வாக்கை சமப்படுத்தவும், வளர்ச்சியற்றுக் கிடக்கும் பர்மாவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் அதனை அவர்கள் பயன்படுத்த முயல்வார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply