“தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்ட அரசியலையே நம்பி இருக்கிறது” : அ. மார்க்ஸ்

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த சில நாட்களில், ஒரு காலைப் பொழுதில் சண்டே இந்தியன் இதழுக்காக நண்பர் சங்கர ராம சுப்பிரமணியனும், க. சுப்பிர்மணியனும் வீட்டுக்கு வந்திருந்தனர். ரொம்ப ‘கேஷுவலாக’ நடந்த உரையாடல் இது.

அறுபது வயதைக் கடந்தும் களச்செயல்பாடுகளிலும் எழுத்துப் பணியிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் அ. மார்க்ஸ், இடதுசாரி கட்சி ஒன்றின் உறுப்பினராகத் தொடங்கி இன்று அவர் சென்றடைந்திருக்கும் இடத்தையும் சிந்தனை மாற்றங்களையும் க. சுப்ரமணியனிடம் பேசுகிறார்.

உங்கள் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு மலேசியாவில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர். அவர் உங்கள் மீது செலுத்திய தாக்கம் பற்றி கூறமுடியுமா?

எனது தந்தை மார்க்சிய இயக்கம் ஒன்றில் தீவிரமாகச் செயல்பட்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர். அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது அங்கு கூலியாகப் போனவர். கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். சிலாங்கூர் மாகாணத் தொழிற்சங்க அமைப்பிற்குத் தலைமை தாங்கியவர் என்கிற அடிப்படையில் அரசியல் பிரக்ஞையும் பொது அறிவு நாட்டமும் அதிகமாக இருந்தது. ஒரத்தனாட்டுக்கு அருகேயுள்ள பாப்பாநாடு கிராமத்தில்தான் எங்கள் வீடு இருந்தது. வீட்டுக்கு ஆங்கிலப் பத்திரிகைகள் உட்பட நாலைந்து பத்திரிகைகள் , குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் வரும். அங்கேயுள்ள வாலிபர்களுக்கெல்லாம் எங்கள் வீடு ஒரு வாசகசாலை மாதிரி இருக்கும். அங்கே வந்து படித்துவிட்டு அப்பாவிடம் பேசிவிட்டு போவார்கள். அவருக்கு இலக்கிய ஈடுபாம்டு இருந்தது. சரத் சந்திரர் மேல இருந்த ஈடுபாட்டால்தான் தம்பிக்கு தேவதாஸ் எனப் பெயர் வைச்சார். புத்தகம் வாசிக்கும் பழக்கம், இலக்கிய ஈடுபாடு நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்.ஆனந்த விகடன்ல வர்ற முத்திரைக் கதைகளை என்னைப் படிக்கச் சொல்வார். காண்டேகர், சரத்சந்திரர் நாவல்கள் அவருக்குப் பிடிக்கும். தமிழில் மு.வ.வை அவருக்குப் பிடிக்காது. ஜெயகாந்தனை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழகம் வந்த பிறகு, புதிதாகத் திருமணமான சூழ்நிலை, இங்கே வந்தபிறகு நேராக அப்போது பிராட்வேயில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குத்தான் நேரா போயிருக்கிறார். இருந்தாலும் இங்கிருந்த சூழ்நிலையில் அவரால் இயக்கத்தில் ஒட்ட முடியவில்லை.நக்ஸல்பாரி இயக்கம் தொடங்கப்பட்ட பின் அந்த இயக்கத்தவர்கள் வீட்டுக்கு வந்துபோவதுண்டு. ஆனா என் அம்மா அவர்களோடு நான் பேசுவதைத் தடுப்பார்கள்.

நீங்கள் எழுத்தாளர் ஆவதற்கு தஞ்சாவூரின் சூழல் என்ன உந்துதலை அளித்தது?

சின்னவயதில் இருந்தே எழுத்தாளனாகும் நோக்கம் எல்லாம் கிடையாது.வீட்டில் ஐந்து பேர். நான் மூத்த பிள்ளை. அதில் மூன்று தங்கைகள். திடீர்னு அப்பா அம்மா இறந்துபோயிடறாங்க. அப்பா பேங்கில் வைத்துட்டு போனது ஐந்தாயிரம் ரூபாய். நான் கல்லூரியில் டெமான்ஸ்ரேட்டர் வேலை பார்க்கிறேன்.நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் எழுதவேண்டும் என்ற உந்துதல் வந்தது.தஞ்சையின் இலக்கியச் சூழல் என்று பார்த்தால் தஞ்சை பிரகாஷ் இருந்தார்.அவருடன் பழக்கம் உண்டு. நாங்கள் இடதுசாரித் தன்மையுடன் செயல்பட்டுக்கொண்டு இருந்தோம், அவருக்கு இடதுசாரி ஆட்களையே பிடிக்காது. அதனால் எங்களுக்குள் பெரிய நெருக்கம் இல்லை. சிபிஎம் நெருக்கடி நிலையை எதிர்த்தது .. சிபிஐ ஆதரித்தார்கள். நக்ஸல்பாரி இயக்கத்துமேல ஆர்வம் இருந்தாலும் அம்மா ஏற்படுத்திய பயத்தால் சிபிஎம்மில் இணைந்து செயல்பட்டேன். அப்புறம் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். அப்போது எனக்கு நல்ல நண்பர் பொ.வேல்சாமி. கிட்டத்தட்ட நாங்க சந்திக்காத நாளே கிடையாது. தினசரி சந்தித்துப் பேசுவோம். அவர் முட்டைக் கடையைப் பூட்டிவிட்டு வந்தார் என்றால் மூணு நாலுமணி நேரம் பேசுவோம். அவருக்கு ஆங்கிலப் புத்தகம் வாசிக்கறது கஷ்டம் என்பதால் நான் மொழிபெயர்த்துச் சொல்வேன். அதே மாதிரி தமிழ் மரபு இலக்கியங்களில் ஆழமான அறிவுடையவர் என்பதால் அதுசம்பந்தமான விஷயங்களை எனக்குக் கூறுவார். அந்தக் கட்டத்துலதான் இங்கே சிவத்தம்பியும் டேனியலும் வந்தார்கள். இருவருடன் பழக்கம் ஏற்பட்டது.குறிப்பா சிவத்தம்பி இங்கே இருந்த ஆறுமாதமும் அவருடன் நாங்கள் தினசரி உரையாடுவோம். அவருடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். தமிழ் இலக்கியம், கலாச்சார அரசியல் குறித்தெல்லாம் தெளிவடைய அவருடனான உரையாடல்கள் உதவின.

தஞ்சை என்மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி சொல்லும்போது பொதியவெற்பனையும் குறிப்பிட்டாகவேண்டும். அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துல செயலாளராக இரு்ந்தார். அவருடைய முனைவன் பத்திரிகையில மணிக்கொடி இதழ்கள் பற்றிய எனது கட்டுரை, இலக்கியவாதிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. என்னுடைய முதல் புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் எனக்கு எழுத்துலகில் பலரை அறிமுகப்படுத்தியது, சிறுபத்திரிகை சூழலைப் பற்றிய புரிதல் ஏற்பட்டதற்கு எல்லத்துக்கும் அவரே காரணம்.

கட்சி சார்ந்த மார்க்சிய இயக்கத்திலிருந்து விலக நேர்ந்த பின்னணி என்ன?

இது பத்தியெல்லாம் நிறைய சொல்லி இருக்கேன்.இடதுசாரி கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த இறுக்கம் எனக்கு ஒத்து வரவில்லை. சிபிஎம் இயக்கத்தில் சேர்ந்த உடனேயே எனது தீவிரமான பணிகள் காரணமாக உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அங்கே அத்தனை சீக்கிரமாக யாரையும் உறுப்பினராக்கமாட்டார்கள். தீக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் எழுத்துப் பயிற்சிக்கு துணையாக இருந்தது. மாதத்துக்கு ரெண்டு மூணு அரசியல் கட்டுரைகளாவது அதில் வரும். அதிலிருந்து விலகிப்போய் மற்ற விஷயங்களை படிப்பது எழுதுவது எனக்கும் கட்சிக்குமான முரண்பாடாகத் தொடங்கியது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துலே இருந்துகொணடே இதைப் பேச முடியாது என்பதால், கைலாசபதி இலக்கியவட்டம் வைத்து இலக்கியக்கூட்டம் நடத்துவது. கட்சி வித்தியாசத்துக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழவனை அழைத்து அமைப்பியல்வாதம் குறித்து பேசவைப்பது போன்ற முயற்சிகளைச் செய்தோம். கட்சிக்கான நிலைப்பாடுகளைத் தாண்டிப் பேசுவது சிக்கலாக இருந்தது. ஐ.மாயாண்டிபாரதி சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு முதலான கம்யூனிஸ்டுகளுக்கு எதிரா போடப்பட்ட வழக்குகளிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வழக்குகளிலும் சிறையில் இருந்தவர். தஞ்சாவூர்க் கூட்டம் ஒன்றுக்கு வந்திருக்கும்போது அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அவரை என் வீட்டில் தங்கவைத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவனித்தேன். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது,அவருடைய சிறைஅனுபவம், தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் கொடுமை பற்றிய விஷயங்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன . அதை டேப்பில் பதிவுசெய்து, பொன்.விஜயனின் புதிய நம்பிக்கை பத்திரிகையில் முதல் பாகம் வெளிவந்தது. கட்சி ஊழியர் வீரமணி நல்ல வேகமான சுருக்கெழுத்தாளர்.அதனால் அவரிடம் பதிவுசெய்த டேப்பைக் கொடுத்து குறிப்பெடுத்துத் தரச்சொன்னேன். அதை அவர் தலைமையிடம் கொடுத்துவிட்டார்.திருவாருரில் கட்சித் தலைமை அலுவலகத்தில் சங்கரய்யா போன்ற தலைவர்கள் விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் போனேன்.கடுமையாக என்னை எச்சரித்து என் முன்னாலேயே டேப்பை அழித்துவிட்டார்கள். திரும்பிப் பேருந்தில் வரும்போது கிட்டத்தட்ட அழுதுகொண்டே வந்தேன். இப்படித்தான் விலகல் ஏற்பட்டது.

83 ஜூலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டது. அப்போது இலங்கையிலிருந்த முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழருமான சண் சென்னைக்கு வந்திருந்தார். நான் அவரைச் சந்தித்துப் பேசினேன். மேலும் ஈழப்பிரச்னைக்கு ஆதரவாகக் கூட்டங்கள் பேசினேன். திருச்சியில் நான் பேசுவதைக்கு குறிப்பெடுக்க டாக்டர் ஆத்ரேயா வந்திருந்தார். என்னை மறுபடியும் விசாரணைக்குக் கூப்பிட்டார்கள்.நான் போகவில்லை. அவங்க உடனே என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். அதற்கான உத்தரவை இப்போது பிரபலமாக மொழிபெயர்ப்பெல்லாம் பண்ணும் கி.இலக்குவன் சைக்கிளில் கொண்டுவந்து என் வீட்டில் கொடுத்தார்.

அதற்குப் பிறகு பீப்பிள்ஸ் வாரலென்கிற நக்ஸல் குழுவில சேர்ந்து கட்சி ஊழியராகவே செயல்பட்டேன். ஆரம்பத்துல கொஞ்சம் பயந்து மனைவி பெயரிலும்,எரிதழல், மா.வளவன் என்கிற புனைபெயர்களிலும் எழுதினேன்.அதன்பிறகு பயம் தெளிந்துவிட்டது. பிறகு அ.மார்க்ஸ் என்கிற பெயரிலேயே எழுதத் தொடங்கினேன். நக்ஸல்பாரி இயக்கத்தில் ரொம்பத் தீவிரமாக வெளிப்படையாகச் செயல்பட்டேன். வகுப்புகள் எடுக்கிறது, பொதுக்கூட்டம் நடத்துவது என்று இருந்தேன். சோவியத் யூனியன் குறித்து சமூக ஏகாதிபத்தியம் என்கிற கருத்தாக்கம் அவர்களுக்கு உண்டு. ரஷ்யாவை ஏகாபத்தியமா பார்த்தார்களே தவிர சோசலிஷமா பார்க்கிறது இல்லை. அதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. சோஷலிசம் இல்லை என்பதில் அல்ல. ஏகாதிபத்தியம் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை சென்னையில் நடைபெற்ற மாபெரும் விவாதம்கிற மாசேதுங்கினுடைய புத்தக வெளியீட்டுவிழாவில் நான் என் கருத்துக்களை வெளியிட்டுப் பேசினேன். அது வேறொரு நக்ஸல் குழுவின் கூட்டம். கேடயம் குழு அல்லது த.நா.மா.லெ இயக்கம் என்பது அதனது பெயர். எழுத்தாளர் செயப்பிரகாசம் இருந்த குழு, அந்தப் பேச்சு நிறைய இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அந்தக் கட்சியினர் கற்பனைப் பெயரில் அதைக் கண்டித்து எழுதினார். என் கருத்துக்கு நிறைய ஆதரவு வந்துச்சசு. என் கருத்து கட்சி நிலைபாட்டிற்குக்கு எதிரானது என்பதால் நானே இந்தமுறை கட்சியை விட்டு வெளியே வந்துவிட்டேன். அப்படி வந்தபோதும் இயக்கத்தை திட்டுவதோ விமர்சிப்பதோ எனது நோக்கமில்லை என்ற நோக்கில்தான் வந்தேன்.

அப்போது தான் நிறப்பிரிகை துவங்கப்பட்டது. நான், ரவிக்குமார், வேல்சாமி,பொதியவெற்பன் நான்கு பேரும் ஆசிரியர் குழுவாய்ச் சேர்ந்து தொடங்கினோம். விரைவில் பொதியவெற்பன் விலகிக் கொண்டார்.

ரஷ்யாவில் தனிச்சொத்துக்கள் அழிக்கப்பட்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்தபின்பும், மக்கள் முதலாளி்த்துவ நாட்டில் இருப்பதைப்போல் அந்நியப்பட்டு தான் இருந்தாங்க. அதன் விளைவு என்ன என யோசிக்கும்போது, அதிகாரம் அரசாங்கத்திடம் இருந்து மட்டும் உருவாவது இல்லை. அது பல நுண்தளங்களில் செயல்படுது. குடும்பம், சாதி. பள்ளிக்கூடம் போன்ற தளங்களில் இருப்பது என்பதை உணர்ந்தோம். இதை உணர்ந்துகொள்ள பின்நவீனத்துவ தத்துவம், பூக்கோ போன்றவர்களுடைய கருத்துகள் உதவுச்சு.பாண்டிச்சேரி நண்பர்கள் ரவிக்குமார், பிரேம் ரமேஷ். எதிர்வு சிவக்குமார்,அருணன், அப்போது திருச்சியிலிருந்த ராஜன் குறை போன்றவர்களின் உறவு,மாற்றுக் கல்வி, மாற்று அரசியல் குறித்த விவாதங்கள் உதவுச்சு. இவர்கள் அனைவருடைய பங்கும் நிறப்பிரிகையில் உண்டு.

அரசியல்ரீதியா சரித்தன்மை (பொலிட்டிகல் கரெக்டிவ்னெஸ்) எப்போதும் படைப்பாளிகளுக்கும், படைப்புகளுக்கும் சாத்தியமானது என்று எண்ணுகிறீர்களா?

ஏதேனும் குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்ந்த பொலிடிகல் கரெக்ட்னெஸ் அல்ல என்னுடையது. கண் எதிரே நடக்கும் தீமையைக் கண்டிக்காமல் போகமுடியாது, பார்த்துவிட்டு போகமுடியாது என்பது சார்ந்து தான் என்னோட பொலிடிகல் கரெக்ட்னெஸ். இன்னொரு விதத்தில் பார்த்தா பொலிடிகல் கரெக்ட்னெஸ்ஸே பல நேரங்களில் எல்லாவித வன்முறைக்கும் காரணமாகிவிடும் என்பதுதான் எனது கருத்து. சமீபத்தில் எழுதியுள்ள அரசு இறையாண்மை ஆயுதப் போராட்டங்கள் போன்ற கட்டுரைகளில் இதை வலியுறுத்தி எழுதியிருக்கிறேன்.

நகைச்சுவையாக ஒரு சம்பவத்தைக் குறிப்பபிட விரும்புகிறேன். புஷ்பராஜ் என்கிற இலக்கிய நண்பரின் திருமணத்திற்கு நான், பழனிச்சாமி, சிவகுருநாதன் மூவரும் பஸ்ஸில் போகிறோம். மதுரை திருத்துறைப்பூண்டி ரூட் மோசமானது. அப்போது”என்னய்யா இது புங்குடு தீவில் போய் வீடு கட்டியிருக்கியே”னு பழனிச்சாமி சிவகுருநாதனைக் கேலி பண்ணுறார். அப்போ நான் ”பழனிச்சாமி, பஸ்ஸே இல்லாத காலத்துலதான் பி.சீனிவாசராவ் இங்கெல்லாம் வந்து இயக்கம் கட்டினார்”னு சொல்றேன். அதுக்கு பழனிச்சாமி ”பஸ் இல்லாட்டி என்ன? கொள்கை இருந்துச்சுல்ல”னு நகைச்சுவையாகச் சொன்னார். கொள்கை என்ற ஒன்று போதும். அது இருந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்,யாரை வேண்டுமானாலும் கொல்லலாம், எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். கொள்கை அதுமாதிரி செய்துவிடும்.

முரண்பாடுகளோடதான் வாழணும். நாம் முரண்பாடுகள் இல்லாம இருக்கமுடியாது. இதற்கு உதாரணமாக புத்தரைச் சொல்லலாம். புத்தரின் உரையாடலில் மயிர்பிளக்கும் விவாதம் எல்லாம் இருக்காது. வைதிகர்கள் மனித இருப்பு, அது இதுனு நிறைய கேள்விகள் கேட்கிறாங்க. அதுக்குப் புத்தரிடம் பதில் கிடையாது. இந்நிலையில் அவரோட பிரதான சீடர்களில் ஒருவரான மாலுங்யபுத்தர் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லலைனா சங்கத்தைவிட்டு விலகிவிடுவேன் என்று சொல்கிறார். அதற்கு புத்தர் ”வீடு தீப்பற்றி எரியும்போது அதில் இருக்கிறவரைக் காப்பத்தணும்கிறது என் நோக்கம். தீ எப்படி பத்திக்கொண்டது என்று நீ காரணம் தேடுகிறாய் ” என்று சொல்வார். முரண்பாடுகள் இல்லாத நிலை என்பது மேற்கத்தியக் கருத்தாக்கம்.கீழைத்தேய கருத்தாக்கத்தை நான் உயர்த்திப் பிடிப்பவன் அல்ல. ஆனால் கீழைத்தேய கருத்தாக்கங்களில் முக்கியமானதே முரண்பாடுகளுடன் வாழ்வதுதான்.

உதாரணமாக இப்போது மதக் கலவர தடுப்புச் சட்டம் பற்றி விவாதம் நடக்கிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுகிறது என சில மாநிலங்களில் சொல்கிறார்கள்.நியாயமான குற்றச்சாட்டுதான். என்னுடைய பொலிடிகல் கரெக்ட்னெஸ் அதுதான். ஆனால் நரேந்திரமோடி போன்ற ஒருவர் வன்முறையைத் தூண்டிவிடும்போது அதை மத்திய அரசு எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கமுடியும்? இதில் எப்படி முரண்படாமல் இருக்கமுடியும். அரசியலும் முரண்பாடுக்கு உட்பட்டதுதான்.

பாரதியை இன்று என்னவாகப் பார்க்கிறீர்கள்?

எதையும் பிரதியாகத் தான் பார்க்கவேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது.ஒரு பிரதியாக பாரதி எழுத்துக்களின் அன்றைய பங்களிப்பு வேறு, இன்றைய பங்களிப்பு வேறு. பாரதியின் கவிதைகள், எழுத்துக்கள் ஆகியவற்றில் சிலவற்றை இன்றைக்கு மிகவும் பிற்போக்கான வேலைக்குக்கூட பயன்படுத்தமுடியும். அன்றைக்கு அந்த எழுத்துக்களின் பங்களிப்பு, ஆங்கில அரசுக்கு எதிரான எழுச்சியை எழுப்புகிற பிரதியாகத்தான் அமைந்தது. பாரதியிடம் எப்போதும் கற்பனை செய்ய முடியாத விரிந்த பார்வை இருந்தது. தன்னை பிராமணன் என்று அழைத்துக்கொண்டார். அன்று உருவாகியிருந்த பிராமணரல்லாதோர் இயக்கத்தைச் சாடவும் செய்தார். அதேசமயம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு டி.எம். நாயர் நிற்கிறார். அந்தக் காலத்தில் ஒரு நடைமுறை உண்டு 50 சதவிகித்ததுக்கு மேல வாக்கு பெற்றால்தான் வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். மூன்று பேர் நிற்கிறார்கள். யாருக்கும் 50 சதவிகிதம் கிடைக்கலை. 50 சதவிகிதம் கிடைக்கிறவரை திரும்பத் திரும்ப தேர்தல் வைப்பார்கள். மூன்றாவதாக குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் பொதுவாக விலகிவிடுவார்கள். மற்ற இருவரும் போட்டியிடும்போது அவர்களில் யாராவது ஒருவர் வெற்றிபெற்றுவிடுவார்.அந்தவகையில் முதலிடத்தில் இருக்கும் நாயர் வெற்றிபெற முடியாமல் மூன்றாவதாக வாக்குகளைப் பெற்ற ஒரு பார்ப்பனர் விலகிக்கொள்ளாமல் திரும்பவும் தேர்தலில் நிற்கிறார்.நாயருடைய அரசியல் முக்கியத்துவத்தையும் அவர் வெற்றிபெறுவதன் அவசியத்தையும் சொல்லி அந்தப் பார்ப்பனரைக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார் பாரதியார்.

உயிர் எழுத்து இதழில் வவேசுவைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. அவரைப் பற்றிய இன்னொரு பரிமாணம் மீனா எழுதிய அந்தக் கட்டுரையில் இருக்கிறது.அவரைப் பற்றி நமக்கிருக்கும் பிம்பம் அவர் குருகுலம் நடத்தினவர்,வர்ணாசிமர தர்மத்துக்கு ஆதரவானவர், சாவர்க்காருக்கு நண்பர் என்பது மட்டும்தான். அவர் சாவர்க்கார் பாதையில் இருந்து விலகி காந்திய நெறிமுறைக்குப் பின்னாளில் வருகிறார். சாவர்க்காரின் அணுகுமுறை மற்றவர்களை, குறிப்பாக முஸ்லிம்களை விலக்கும் அணுகுமுறை. காந்தியின் அணுகுமுறை அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறை. ராஜாஜி பார்ப்பனர்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டார் என்பதில் கருத்து மாறுபாடு இருக்கமுடியாது.ஆனால் பாபநாசம் குருகுலப் பிரச்னை தொடர்பாக வரதராஜுலு நாயுடு, ராஜாஜி, வவேசு மூணு பேரும் பேசுகிறார்கள். வவேசு சொல்கிறார், நான் ஒன்றும் வேண்டுமென்றே அந்த மாணவர்களை தனியாகப் பிரித்துவைக்கவில்லை.அவங்க வீட்டுக்காரங்களுக்கு நான் வாக்குறுதி கொடுத்துட்டேன். நான் கூட மற்றவர்களோடு சேர்ந்துதான் சாப்பிடறேன். சிலநாட்களில் மனசு வருத்தப்பட்டு கடலைகொட்டைதான் சாப்பிடறேன்” என்கிறார். அதற்கு ராஜாஜி, “ நீ கடலைக் கொட்டை சாப்பிடறியோ என்ன சாப்பிடறியோ அது தேவையில்லை.நாயக்கரோட கேள்விக்கு அது பதிலில்லை. எல்லோரும் சேர்ந்து சாப்பிட முடியுமா முடியாதா” என்று கேட்கிறார். இதை யாருமே எதிர்பார்க்கமாட்டாங்க.இந்த மாதிரியான பன்முகத்தன்மையோட அவர்கள் இருந்திருக்கிறார்கள்.ஜெயமோகன், சோ போன்ற நபர்கள் பேசும் இந்துத்துவத்தையும் அவர்களின் நடைமுறையையும் ஒப்பிட்டே பார்க்கமுடியாது.

இன்று தமிழ்த் தேசியம் ஒரு திரட்சியைப் பெற்றுள்ளது. அதுபற்றி உங்கள் எண்ணம் என்ன?

அப்படியான சூழல் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது வெகுஜனத்தன்மை அடைந்திருப்பதாகச் சொல்லமுடியாது. கிராம அளவில் அவர்களின் போராட்டங்கள் எட்டவில்லை. அன்னா ஹசாரே இயக்கத்தைப் பொருத்தவரையும் இதுதான் நிலை. தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளை நம்பியே இயங்குகிறது. முல்லைப் பெரியார் போன்ற உள்நாட்டு அரசியலை சார்ந்து இயங்குவது குறைவு. அதுவும்கூட தமிழ்த் தேச எதிரிகளைக் கட்டமைப்பதை நம்பியே இயங்குகிறது. சமச்சீர்க் கல்வி, சாதிக் கொடுமை போன்ற மக்களைப் பாதிக்கக்கூடிய மற்ற வாழ்வாதாரப் பிரச்னைகளில் முன்வந்து இயங்கியிருக்கவேண்டும். சீமான் இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். நெடுமாறன், நாங்கள் எல்லாம் விமர்சிக்க ஆரம்பித்த பிறகு வந்தார். சிங்காரச்சென்னை போன்ற சென்னையை அழகுபடுத்தும் திட்டங்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும்சரி அதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன. சென்ற ஆட்சியில்1 இலட்சம் குடும்பங்கள் இடம்பெயர்க்கப்பட்டு துரைப்பாக்கம், கண்ணகி நகர் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் வாழ்வை இழந்து,வசதிக்குறைவுடன் மிகவும் சிரமப்பட்டபோது தமிழ்த் தேசிய இயக்கங்கள் எதுவும் போராடமுன்வரவில்லை. வைகோ ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியது ஒரு விதிவிலக்கு. சென்னையில் திமுக ஆட்சியில் 49 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு எதிராக எந்தத் தமிழ்த் தேசிய இயக்கமும் குரல் கொடுக்கவில்லை. விவசாயிகள் தற்கொலை தமிழ்நாட்டில் இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் கிட்டத்தட்ட 1000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். உள்நாட்டுப் பிரச்னையுடன் இணைக்கும்போதுதான் மக்களை ஒருங்குதிரட்டமுடியும். அரபுலகத்தில் ஏற்பட்ட புரட்சியை கவனித்துப் பார்த்தால் புரியும். அரபுலக மக்களுக்கு பாலஸ்தீன மக்களிடம் தீவிர அனுதாபம் இருந்தது. அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் நடக்கவில்லை. கிட்டத்தட்ட இந்திய தமிழக இலங்கையையொத்த சூழல்.ஆனால் அரபுநாடுகளில் புரட்சி வந்து விடுதலையை நோக்கி நகர்ந்தபோது,தங்கள் சொந்தப் பிரச்னைக்காக மக்கள் திரண்டெழுந்தபோது, இயல்பாகவே பாலஸ்தீன பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் சூழல் வந்திருக்கிறது. முன்பு போலவே பாலஸ்தீன விஷயத்தில் அரபுநாடுகள் இனிச் செயல்பட முடியாது.

தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடுள்ளவர்களில் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள இளைஞர்களும் காணப்படுவது பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால் இன்றைய இளைஞர்களிடம் தேடுதல் வேட்கை குறைவாக இருக்கிறது. இந்திய, உலக அரசியலை அதன் முழுச் சிக்கல்களுடன் புரிந்துகொள்ளும் தன்மை அதன் முந்தைய தலைமுறையிடம் இருந்த அளவுக்குக்கூட இப்போதுள்ள தலைமுறையிடம் இல்லை. இன்று தமிழ் இணைய தளங்களில் வெளிவரும் கட்டுரைகளின் எண்ணிக்கையும் தரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தரரீதியாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கட்டுரைகள் ரொம்பக்குறைவு. வாசிப்பும் குறைவு.

எதையும் எளிமைப்படுத்தி புரிஞ்சுக்கிறாங்க. ஈழத்தமிழர்களின் சமூக உருவாக்கம், அரசியல் வரலாறு ஆகிவைபற்றியெல்லாம் யாரும் தெரிந்து கொள்ள அக்கறை செலுத்துவது இல்லை.. உதாரணமாக இங்கிருந்து ஈழத்தமிழர்களைப் பார்வையிடச் சென்ற 11 எம்பிகளில் ஒருவர், மலையகத் தமிழர்களைப் பார்த்துவிட்டு இலங்கைத் தமிழர்கள் ஏன் தனித்தனியாக இருக்குறீங்க? நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கலாமே என்று கூறினாராம். மலையகத் தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள் கூட அவருக்குத் தெரியவில்லை. தமிழீழத்துக்கு குறைவாக எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் தமிழ்த் தேசியர்கள். ராஜபட்சேயைக் குறறவாளிக்கூண்டில் ஏற்றுவது தான் தமிழர்களுக்கு தீர்வு என்ற விதத்தில் பார்க்கிறார்கள். நிச்சயமாக ராஜபட்சேயைக் கூண்டில் ஏற்றி விசாரிக்கணும். ஆனால் ஈழத்தமிழர்களுடடைய பிரச்னை அதுமட்டுமல்ல இப்போதைக்குத் அவர்களுக்குத் தேவை உடனடியான அடிப்படை வாழ்வு, கண்ணியமான அரசியல் தீர்வு, ராணுவநீக்கம். அதுபற்றி யாரும் இங்கு பேசுவது கிடையாது.அதனால் ஈழப்பிரச்னையைப் பற்றி இங்கு யாரும்அதன் முழுப் பரிமாணத்துடன் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

பால்தாக்கரேவை தனது ரோல்மாடலாகக் கொள்கிறார் சீமான்.இன்றைக்கும் அவரது செயல்பாடு அந்த அடிப்படையில்தான் இருக்கிறது. இது பாசிசத்துக்கு இட்டுச்செல்லும். தேசியம் என்பது அனைத்து இனத்தினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்தியாவைப் பல்வேறு சிறுபான்மையினரின் தொகுதியாகத் தான் காந்தி பார்த்தார். அது இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொருந்தும். பரமக்குடியில் நடந்த படுகொலைகளுக்காக இதுவரை மார்க்ஸிஸ்ட் கட்சி மட்டுந்தான் போலீஸைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியர்கள் யாரும் இதுகுறித்து இன்னும் பேசவில்லை.

தொடர்ந்த செயல்பாட்டில், நட்பின் மூலம் கொடுத்ததும் பெற்றதும் என்ன?

எல்லோருடைய நட்பின் மூலமாகவும் நிச்சயம் நான் பயனடைந்திருக்கிறேன்.இலக்கிய ரீதியாக, அறிவுரீதியாக. களச்செயல்பாட்டிலும் அவர்களின் துணை இருந்திருக்கு. விலக நேர்ந்த தருணங்கள் துயர்மிகுந்த தருணங்கள். அதற்கு அவர்களிடம் ஒரு நியாயம் இருந்திருக்கலாம். என்னிடமும் ஒரு நியாயம் இருந்திருக்கிறது. என்னிடமிருந்து பிரிந்தவர்களுடைய அரசியல் பெரிய அளவில் வேறுபட்டுவிட்டது எதையெல்லாம் எதிர்த்தார்களோ அதனுடன் எல்லாம் சமரசம் செய்துகொண்டார்கள். வெகுஜனநீரோட்ட அரசியலிலும்,அதிகாரங்களிலும் வேகமாகச் சென்று சேர்ந்தனர். என்னால்சமரசம் செய்ய முடியாததால் நான் விலக நேர்ந்தது.

உங்கள் நிலைப்பாடு இலங்கை அரசின் தரப்புக்கு நெருக்கமாக செல்வதாக சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அதுபற்றி?

என்னைப் பற்றிய அரிச்சுவடி தெரிந்தவர்கள், நான் இலங்கை அரசுடன் மட்டுமல்ல எந்த அரசுடனும் அதிகாரத்தைச் செலுத்தும் எந்த அமைப்புகளுடனும் சமரசம் செய்துகொண்டதாகச் சொல்லமாட்டார்கள்.புலிகளின் ஆதரவாளர்கள் அவர்களது மொழியில் பேசுகிறார்கள். நான் என்னுடைய மொழியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து, தமிழீழம் ஒன்றே தீர்வு என்று அவர்கள் சொல்கிறார்கள்.அருந்ததி ராயை ஈழப்பிரச்னைக்கு ஆதரவாக அறிக்கை விடவைத்தது எங்களது முயற்சிதான். இவர்களுக்கு தமிழர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற அக்கறையில்லை. போர் நடைபெற்றபோது அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு வேண்டுகோள் வைத்திருக்க வேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்த்து,மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியபோது தமிழ் தேசிய இயக்கங்கள் அறிவுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் தவறான ஆலோசனைகளையும் தகவல்களையும் தான் தெரிவித்துக்கொண்டு இருந்தனர். சிங்கள இன வெறி அரசியலைக் கடுமையாக எதிர்த்த அதேநேரத்தில் இதையும் செய்திருக்க வேண்டும்.இரகசியமாகவாவது செய்திருக்க வேண்டும். பத்மநாபா, ரஜினி திரணகம உள்ளிட்டோர் கொல்லப்பட்டபோது கண்டித்திருக்க வேண்டும். இந்திய அரசின் மீது நம்பிக்கையூட்டியிருக்கக் கூடாது. இவர்களுடன் சேர்ந்து செயல்பட எனக்கு வாய்ப்புக் குறைவு.இன்று ஐ.நா. அறிக்கை பற்றி இந்தத் தமிழ்த் தேசிய இயக்கங்கள் பேசுகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஐநா அறிக்கையில் இலங்கை அரசு மீது சொல்லப்பட்ட ஆறு குற்றங்களை நான் எழுதியிருக்கிறேன். புலிகள் மீது சொல்லப்பட்ட ஐந்து குற்றஙகளையும் கூடவே சொன்னதுதான் இவர்களுக்கு எரிச்சல்.. 40,000பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறேன். இதே எண்ணிக்கையைத் தான் ஐ.நா அறிக்கையும் தெரிவித்துள்ளது. என்னுடைய கட்டுரைகள் கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் தமிழ் தினசரிப் பத்திரிகையில் தொடர்ந்து வருகிறது. அந்த பத்திரிக்கை தீவிரமாக ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த பத்திரிகை என்பதை குறிப்பிடுகிறேன். அதே பத்திரிகையில் ராஜபட்சே அரசை விமர்சித்தும்கூட அவ்வப்போது எழுதி வருகிறேன். இலங்கைப் பயணம் குறித்துத் தீரநதியில் மூன்று இதழ்களில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாவது, மூன்றாவது இதழ்கள் இலங்கையில் விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை.

ஒரு களச்செயல்பாட்டாளராகவும் எழுத்தாளராகவும் சொந்த சௌகரியங்கள்,பொருளாதார நலன்கள், வசதியான குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை பெரிதளவு இழந்தவர் நீங்கள். இந்த வாழ்க்கை உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?

தனிப்பட்ட வாழ்க்கையில் சராசரி, நடுத்தர வர்க்க தந்தைபோல் குழந்தைகளை வளர்க்க்கூடிய சூழல் எனக்கு இருந்ததில்லை. என் மனைவி பெரிதாக எதுவும் எதிர்பார்க்கவில்லை. குழந்தைகளுக்கு சில சங்கடங்கள் இருக்கலாம். ஒரு விளையாட்டு வீரன் எப்படி விளையாட்டின்மீது கவனம் செலுத்துவானோ,சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் எப்படித் தம் தொழிலுடன் தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டன, அதுபோல் இந்த வாழ்க்கையை, எழுத்துப் பணியை, களச் செயற்பாடுகளை என் வஆழ்க்கையாக்கிக் கொண்டேன்.. இதனைச் சிரமப்பட்டுச் செய்யவில்லை. மகிழ்ச்சியாகவே செய்கிறேன். மனித உரிமை சார்ந்து எனக்கேற்பட்ட அனுபவங்களை எழுதலாமென்று இருக்கிறேன்.

தமிழகத்தில் தற்போது கலாச்சார, மாற்று செயல்பாடுகள் உத்வேகமாக நிலவுகிறதா?

நிறப்பிரிகை காலகட்டத்தில், 1994 இல் சிறு இயக்கங்களுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழக மாநாடு நடக்கிறது. அதற்கு முன்பு இயக்கங்களுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் கூட்டு நடந்ததில்லை. நிறப்பிரிகை தொடர்பாக பல விவாதங்களை நடத்தியுள்ளோம். அப்போது பல விஷயங்கள் சம்பந்தமாக பல்வேறு முரண்பட்ட தரப்பினர் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம்.முடிவுக்கு வராமலும் போயிருக்கோ்ம். இன்றைக்கு கூட்டு விவாதத்துக்கான சாத்தியமே இல்லை. எதையும் காதுகொடுத்துக் கேட்கும் தன்மை இல்லை.உரையாடல் குறைந்திருக்கிறது. மாற்றுக் கருத்திற்கான தேடல் குறைந்திருக்கிறது. தலித் இயக்கங்கள் வெகுஜன நீரோட்டத்துடன் கலந்துவிட்டன. இன்றைக்கு கற்பனையே இல்லாத சூழல் நிலவுகிறது. கனவுகள் குறைந்துபோய் விட்டன. விலங்குகளுக்கு கற்பனை செய்து பார்க்கும் திறன் இருக்கிறதா தெரியவில்லை. தன்னை மற்றவனாக கற்பனை பார்க்க முடியாத நிலையில்தான் ஒரு பயங்கரவாதி மற்றவர்களைக் கொலைசெய்கிறான்.ஆனால் எழுத்தாளனோ கலைஞனோ பிறரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவும் அனுதாபம் கொள்ளவும் தெரிந்தவன். ஆனால் இன்றைக்கு தமிழ் எழுத்தாளர்களிடமும் மற்றமை மீதான நேசம் குறைந்துவருகிறது. குறுகிய மனப்போக்குகள் அதிகரித்துவிட்டன.

இன்றைக்கு தமிழில் படைப்புகள் என்று பார்த்தால் பெரிய பெரிய நாவல்கள் வந்திருக்கு. நிறைய வளங்கள் உருவாகி இருக்கிறன. ஆனால் ஆரோக்கியமான உரையாடல்கள், விவாதங்கள் ஆகியவை இல்லை. அது கவலை அளிக்கும் விஷயம்.

நேர்காணல்: க.சுப்பிரமணியம்
சண்டே இந்தியன்

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply