பிரிட்டனிலிருந்து இரான் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

லண்டனிலுள்ள இரான் தூதரகத்தைச் சேர்ந்த இராஜதந்திர அதிகாரிகள் பிரிட்டனிலிருந்து வெள்ளிக்கிழமை நண்பகலுடன் வெளியேறுகின்றனர்.

இந்த வார முற்பகுதியில், தெஹ்ரானிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள் அதனுள் அத்துமீறி நுழைந்து பெரும் களேபரங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து கடந்த புதனன்று, வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக், இரானிய தூதரக அதிகாரிகள் 48 மணிநேரத்திற்குள் தூதரகத்தை மூடிவிட்டு நாட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென கால அவகாசம் வழங்கியிருந்தார்.

இரானிய அரசின் மறைமுக அனுமதியின்றி தெஹ்ரானிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டிருக்க மாட்டாது என்று வில்லியம் ஹேக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இரானின் அணுத்திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீது மேலும் தடைகளை விதிக்க பிரிட்டன் முடிவெடுத்ததன் பின்னணியிலேயே நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களால் தூதரகம் தாக்கப்பட்டது.
அதனையடுத்து தெஹ்ரானிலிருந்த அனைத்து பிரிட்டன் தூதரக அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கூறினார்.

இதுதவிர ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இரானுக்கான தமது தூதுவர்களை ஆலோசனைக்காக கடந்த புதனன்று மீள அழைத்துக் கொண்டன.

நோர்வேயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடிவிடுவதாக அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply