ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை அமுல்படுத்துங்கள், புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம்: சம்பந்தன் அரசிடம் வலியுறுத்து

இலங்கையின் அனைத்து மக்களும் ஆவலாகவுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர இணக்கப்பாடுகளை அமுல்படுத்தும்படியும் இதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்களின் பெயர்பட்டியலை முன்வைக்குமாறு அரசாங்கத் தூதுக்குழுவினர் நேற்று கோரியதால், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தனின்  அறிக்கை வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் யோசனைக்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தூதுக்குழுவுக்கும்  இடையில் 10.11.2011 ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதை அவ்வறிக்கையில் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” 2011  ஜனவரி 10 ஆம் திகதி முதாலாவது சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தனது யோசனைகளை த.தே.கூ. வெளிப்படுத்தியது.  2011  பெப்ரவரி 3 ஆம் திகதி பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த யோசனைகனை எழுத்துமூலம் த.தே.கூ. சமர்ப்பித்தது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய மேலும் விரிவான யோசiனையை எழுத்துமூலம் 2011  மார்ச்  18 ஆம் திகதி மூன்றாவது சந்திப்பின்போது அது சமர்ப்பித்தது. இந்த யோசனைகளின் அடிப்படையில் அர்த்த்முள்ள பேச்சுவார்த்தைகளை தொடர்வது குறித்த தனது பதிலை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் அப்போது இணங்கியது.

ஆனால், அதன்பின் அடுத்த 5 மாத காலத்தில் 7 தடவை சந்திப்பு நடந்தது. ஆனால் அரசாங்கம் தனது பதிலை சமர்ப்பிப்பதாக மீண்டும் மீண்டும் உறுதியளித்த போதிலும் அதை செய்யவில்லை.

இந்நிலையில் 2011 ஓகஸ்ட் 4  ஆம் திகதி நடந்த சந்திப்பின்போது, தனது விரிவான யோசனைகளுக்கு அரசாங்கம் தமது பதிலை முன்வைக்கத் தவறினால், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியாது எனவும் அரசாங்கத்தின் பதில் கிடைக்கும்வரை பேச்சுகளுக்கு மேலும் திகதி நிர்ணயிப்பதில் அர்த்தமில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

அதன்பின் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் த.தே.கூ. தலைவருக்கும் இடையிலான சந்திப்பின்போது மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டது. இதன்படி தூதுக்குழுக்கள் செப்டெம்பர் 16 ஆம் திகதி சந்தித்து மேற்படி நடைமுறைகள் நிகழ்ச்சிக்குறிப்பில் சேர்க்கப்பட்டன. ஒக்டோபர் 20 ஆம் திகதி நடந்த சந்திப்பில் இவை உறுதிபடுத்தப்பட்டன.

இதன்படி அரசாங்கத் தூதுக்குழுவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்வதெனவும் இதில் ஏற்படும் இணக்கப்பாட்டை உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் முன்வைப்பதெனவும் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.

ஏற்றுக்கொண்டபடி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவதற்கு, இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் கருத்திற்கொள்ளத்தக்க இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இப்பேச்சுவார்த்தைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளது. இலங்கையின் அனைத்து மக்களும் ஆவலாகவுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர இணக்கப்பாடுகளை அமுல்படுத்தும்படியும் இதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.”

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply