கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அரசாங்கம் அமைக்கும் நடவடிக்கையானது தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான காலம் கடத்தும் நாடகமாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்க்கட்சிகள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து கருத்துக் கேட்டபோதே தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறாவிடின் பேச்சுக்களை தொடர முடியாத நிலை ஏற்படுமென்று அரசாங்கத் தரப்பில் அமைச்ர் ஜி.எல்.பீரிஸ் தெவித்துள்ளார்.

ஆனால், தீர்வு குறித்து இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெவித்துள்ளார். இந்த நிலையில் இழுபறி நிலையேற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரிடம் வினவிய போதே கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் தேவைகள் நிறைவேறவில்லை! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி,

தமிழ் மக்களுக்கு என்னென்ன தேவை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அப்பகுதிகளுக்கும் இருக்கின்ற தேவைகள் என்ன என்பதையெல்லாம் நாம் அரசாங்கத்துக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றோம். எனினும் இதுவரையில் அவை நிறைவேற்றப்பட்டதாக இல்லை.

அரசாங்கத்தினால் வெளிக்காட்டப்பட்டு வருகின்ற பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற விடயமானது அரசாங்கத்தின் கண்துடைப்பாக இருக்கின்றது.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற பேச்சுக்களில் அரசியல் தீர்வு குறித்தே பேசப்பட்டு வருகின்றது. எனினும் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும் என்றார்.

பேச்சை முறித்துவிட்டு அரசு என்னசெய்யப் போகின்றது! சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா

இனப்பிரச்சினை தீர்வு குறித்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வினைக் காணவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை முறித்துவிட்டு அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது.

தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலையினால் பேச்சுக்கள் முறிவடையும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன், பாராளுமன்ற தெரிவுக்குழுவானது தீர்வை இழுத்தடிக்கும் நிலைக்கு கொண்டுசெல்லலாம் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதன் மூலமே ஒரு தீர்வை எட்ட முடியும். கடந்த காலங்களில் விட்டுக்கொடுப்புக்கள் இன்மையாலேயே இன நெருக்கடிக்கான தீர்வு இழுபட்டது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.

தெரிவுக்குழுவில் தீர்வோ நியாயமோ கிடையாது! புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை எனும் இதுவரையில் பலதரப்பட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்.

எம்மைப்பொறுத்தவரையில் அரசாங்கத்தின் இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு எனும் கட்டமானது வழிகாட்டல் இல்லாத ஒரு போக்கில் அமையப் பெற்றிருப்பதாகவே தோன்றுகின்றது.
அங்கு இனவாதக் கட்சிகள் முன்னுரிமை பெற்று நிற்கின்றன.

தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து தீர்வோ இல்லாவிட்டால் நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்பது தான் உண்மையாகும். எனவே, அவ்வாறானதொரு ஏமாற்றுத் திட்டத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிப்பது என்பது அர்த்தடையதாக அமையாது.

தமிழரையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயல்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது சிங்கள தேசத்தின் பல்தரப்பட்ட பெரும்பான்மைக் கட்சிகளை உள்வாங்கியிருக்கின்ற ஒரு அமைப்பாகும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றது.

பேச்சுவார்த்தை மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற அரசாங்கத்தின் கையாளுகைகள் எல்லாமே தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான நாடகங்களாகும்.

எனவே, தெரிவுக்குழு என்ற வலைக்குள் கூட்டமைப்பு சிக்கிவிடக் கூடாது என்பது எமது வலியுறுத்தலாகும்.

http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=05_12_2011_001_014&mode=1

http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=05_12_2011_014_001&mode=1

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply