இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று காணப்பட வேண்டுமாயின் அதற்கு ஒரே வழி கூட்டமைப்புடன் பேசுவதேயாகும்: சிறிரெலோ தலைவர் உதயராசா
இனப்பிரச்சினை தீர்வு குறித்து அராங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்வார்த்தை நடத்தியே தீர்வினைக் காணவேண்டும். இதனைவிடுத்து வேறு மார்க்கத்தில் தீர்வொன்றினைக் காண முடியாது என்று சிறிரெலோ அமைப்பின் தலைவர் ப. உதயராசா வீரகேசரிக்கு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் பெறாவிடின் பேச்சுக்களை தொடரடியாத நிலை ஏற்படுமென அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது வேறு விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சு என்பது வேறு விடயமாகும். இவை இரண்டையும் ஒன்றாக பார்ப்பதனால் தான் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட பின்னர் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே இன்றைய சூழலில் விட்டுக்கொடுப்பே அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலை தொடர்பாக கருத்துக் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தையை முறித்துவிட்டு அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இதுவரை 14 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இருந்ததோதிலும் இன்னம் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த சுற்றுப் பேச்சுக்கு முன்னைய பேச்சுவார்த்தையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசவண்டிய விடயங்கள் குறித்து நிகழ்ச்சி நிரல் தயாஎஇக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையினால் பேச்சுக்கள் முறிவடையும் சூழல் உருவாகியுள்ளது.
அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை முறிவடையுமானால் அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று காணப்பட வேண்டுமாயின் அதற்கு ஒரே வழி கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதேயாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறமாட்டோம் என முற்றுழுதாக மறுக்கவில்லை.
மாறாக இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இரு தரப்பினரும் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் அதனை பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கும் போது அதில் பங்குபற்றுவது குறித்து பரிசீலிக்கும் நிலைப்பாட்டையே கூட்டமைப்பு கொண்டுள்ளது. எனவே, இந்த விடயத்தில் முரண் படாது விட்டுக்கொடுப்பினை மேற்கொண்டு பேச்சுக்கள் தொடரப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
கடந்தகாலங்களில் திம்பு பேச்வார்த்தை, புலிகளுடனான நோர்வே பேச்சுவார்த்தை உட்பட பல்வேறுபட்ட பேச்சு முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட வில்லை. பேச்சுக்களில் என்ன இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும்.
யுத்தம் முடிவடைந்துள்ள இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுக்கள் முறிவடைந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எட்டாக் கனியாகவே மாறும்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவை வைத்துக்கொண்டு பேச்சுக்களை முறிப்பதற்கு முனையக்கூடாது. பாராளுமன்ற தெரிவுக்கு குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல தரப்பினரும் பங்குபற்றுவர். தற்தோதைய நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவானது தீர்வை இழுத்தடிக்கும் நிலைக்கு கொண்டுசெல்லாம் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதன் ஒரு அரசியல் தீர்வை எட்ட முடியும். கடந்த காலங்களில் விட்டுக்கொடுப்புக்கள் இன்மையாலேயே இன நெருக்கடிக்கான தீர்வு இழுபட்டது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply