கைலாசபதியும் தமிழ்த் தேசியமும்
தமிழ்த் தேசிய வாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
இப்போது தேசியவாதத்தைவிடப் பிரதேசவாதத்தையே முன்னிறுத்துகிற போக்குக்களுக்கு முகங்கொடுக்க இயலாத நிலையில் தேசியவாதம் தடுமாறுகிறது. எத்தனையோ இயக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்மோதல்களாலும் இயக்கங்களிடையிலான மோதல்களாலும் தமிழ்ச் சமூகம் வீணான உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கிறது.
அன்று தமிழ் ஈழக் கோரிக்கைகளை நிபந்தனையின்றி ஏற்க மறுத்த எல்லாரையுமே துரோகிகள் என்று பட்டஞ் சூட்டிப் பழித்த தமிழ்த் தேசியவாதிகள் இப்போது எங்கே போய் நிற்கின்றனர்? யாருடைய நிழலை நாடுகின்றனர்? யாருக்காகப் பணியாற்றுகின்றனர்?
இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது?
எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா? தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா?
இதன் பின்னணியிலேயே பேராசிரியர். க. கைலாசபதி தமிழ்த் தேசியம் பற்றிக் கூறியவற்றை மீள்பார்வை செய்யலாம் என நினைக்கிறேன். தமிழ்த் தேசியம் பற்றிக் கைலாசபதி செம்பதாகையில் 1978 – 1981 காலப்பகுதியில் ஜனமகன் என்ற பெயரில் ‘காலமும் கருத்தும்’ என்ற பத்தியைத் தொடர்ந்து எழுதி வந்தார். அதில் அவர் தமிழ்த் தேசியம் பற்றி, தமிழ் அரசியல் நிலைமைகள் பற்றி, சாதியத்திற்கெதிரான வெகுஜனப் போராட்டங்கள் பற்றி என அன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் தலைமைகள் பற்றியும் அதன் குறைபாடுகள் பற்றியும் அது செல்ல வேண்டிய திசை வழி பற்றியும் பல நீண்ட பத்திகளை எழுதியிருக்கிறார்.
கைலாசபதி தன்னை ஒரு அரசியல்வாதியாகவோ எந்த ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவோ காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவரது எழுத்துக்களும் பல்துறை சார் செயற்பாடுகளும் அவரது மார்க்சிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவே அமைந்தது.
அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்திலேயே நின்றார். அவர்களது போராட்டங்களை ஆதரித்தார். பரந்த நோக்கில் அவரது சமூகப்பார்வையும், தேசிய, சர்வதேசிய அரசியல் விவகாரங்கள் பற்றிய பார்வையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான மார்க்சியப் பார்வையே. தமிழ்த் தேசியம் தொடர்பில் மிகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார் என்பதை அவரது கட்டுரைகளின் வழி அறிய முடியும்.
தமிழ்த் தேசியம் பற்றிய கைலாசபதியின் கருத்துக்களை இரண்டு அடிப்படையில் நோக்க முடியும்.
1. தமிழ்த் தேசியம் பற்றிய கோட்பாடு ரீதியான பார்வை
2. தமிழ்த் தேசியத் தலைமைகள் பற்றிய விமர்சனப் பார்வை
கைலாசபதி தனது பத்திகளில்; ‘தமிழர் விடுதலைக் கூட்டணியை’ ‘தமிழர் வியாபாரக் கூட்டணி’ என்றே அழைத்தார். ‘தமிழர் வியாபாரக் கூட்டணி’ என்று அவர் ஒவ்வொரு தடவை பயன்படுத்தும் போதும் அதில் தமிழர் விடுதலைக் கூட்டணி செய்யும் ‘அரசியல் வியாபாரம்’ பற்றிய விமர்சனம் அடங்கியிருக்கும். தமிழ்த் தேசியத்தின் குறைபாடுகள் பற்றியும் அது தொடர்ந்து எடுத்துவரும் குறுந்தேசிய நிலைப்பாடுகள் பற்றியும், இதனால் நீண்டகாலப் போக்கில் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் பற்றியும் கைலாசபதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
1976 ஆம் ஆண்டு ஒரு பகிரங்க விவாதத்தின் போது “தமிழீழத்தை வென்று தர உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது?” என்று கம்யூனிஸ்ற்றான சண்முகதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்தை நடுவர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையிற் கேட்டபோது, “அது எங்கள் இரகசியம்” என்று தருமலிங்கம் கூறிய பதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் வியாபாரத்தை தெளிவாகக் காட்டும் ஒரு சம்பவம் என எழுதும் கைலாசபதி, இவையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வெறும் வாய்ஜாலங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளே. இவை வெறுமனே தமிழ்த் துவேஷத்தை உருவாக்க உதவுமேயன்றித் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்று எழுதுகிறார்.
இவ்வாறான தமிழ்த் தேசியச் செயற்பாடுகள் நீண்டகால நோக்கில் மலையகத் தமிழ் சமூகத்தையும் மூஸ்லீம் சமூகத்தையும் தமிழ்ச் சமூகத்திலிருந்து பிரித்து வைக்கவே பயன்படுகின்றன என எச்சரித்தார். இவ்வகையில் தமிழ்த் தேசியம் பற்றிய அவரது கணிப்பும் பார்வையும் மிகச் சரியானது.
முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் எப்போதிருந்தோ சொல்லி வந்தவர்கள் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று நிந்திக்கப்பட்டனர்.
வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டியோ அதே அடிப்படையில் அமைந்த தமிழீழமோ எந்த வகையில் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் என்பது பற்றி எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள் தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர்.
இவ்விடத்தில் எனக்கொரு கவிதை ஞாபகம் வருகிறது.
துரோகி எனத் தீர்த்து
முன்னொரு நாள் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை
வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது
எதிர்த்தவனைச் சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்
சுட்டது
இந்தியா பற்றிய மயக்கங்கள் இன்று வரை இருந்து வருகின்றன. தமிழ்த் தேசியவாதிகள் கருணாநிதி என்ற மீட்பர் மீதும் அவர் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்பவர் என்றும் உருவாக்கப்பட்ட படிமத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கருணாநிதியின் அண்மைய குத்துக்கரணங்கள் உட்பட, இந்தியா ஈழத் தமிழர்களை எத்தனையோ தடவை எய்த்திருக்கிறது. கடைசியாக பாரதீய ஜனதா கட்சியை நம்பினால் காரியம் கைகூடும் என்கிற நம்பிக்கையை வளர்க்கிற முயற்சிகளில் வந்து நிற்கிறோம். ஆனால் இந்தியா பற்றியோ கருணாநிதி பற்றியோ, மாயைகள் இன்னமும் கலைந்தபாடாய் இல்லை. நல்ல மாட்டிற்குத் தானே ஒரு சூடு.
1979இலேயே கைலாசபதி கருணாநிதி பற்றி எழுதினார்:
கருணாநிதி அண்மையில் வாணொலிப் பேட்டியில் ‘தி.மு.க. இந்தியத் தமிழ் மக்களுக்கல்ல. ஈழம் வாழ் தமிழ்மக்களும் வாழ்வில் பாதிப்புறும் வகையில் உரிமைகள் மறுக்கப்பட்டால் மத்திய அரசின் ஊடாக நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறியுள்ளார். இக் கூற்று ‘மூஞ்சூறு தான் போக வழியைக் காணவில்லை விளக்குமாற்றையும் தூக்கிச் சென்றதாம்’ என்பதுபோல் உள்ளது.
“தமிழ்நாட்டில் தி.மு.கவும் கருணாநிதியும் ஏழு வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்தவர்கள். இந்த ஏழு வருட ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்தது சாதிக் கொடுமைகள், பஞ்சம், பசி, பட்டினி முதலியனவாகும். மறுபுறத்தில் ஆளும் சொத்துடைய வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய தி.மு.கவும் கருணாநிதியும் சாதாரண தமிழ்மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களான கோதுமை மா, சர்க்கரை என்பவற்றில் மோசடிசெய்து பலகோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்தனர். இதனால் தி.மு.கவும் கருணாநிதியும் சக்காரியா கமிஷன் முன் குற்றவாளிகளாகவும் நிறுத்தப்பட்டனர். தனது நாட்டில் தனது மொழியினைப் பேசுகின்ற தனது இன மக்களின் பொருட்களையே கொள்ளையடித்த தி.மு.கவும் கருணாநிதியும் தான் மத்திய அரசின் ஊடாக அயல்நாடான ஈழத்தமிழ் மக்களுக்கு உதவப் போகிறார்களா?”
கருணாநிதி பற்றிய கைலாசபதியின் மதிப்பீடு எவ்வளவு சரியானது. தமிழ்த் தேசியவாதிகளுக்கு இந்தியா குறித்து இருந்த மயக்கம் பற்றியும் கடுமையான விமர்சனங்களை அவர் எழுதியிருக்கிறார். “இந்திரா எங்கள் தாய், அவள் ஈழத் தமிழரது உரிமைகளை வென்று தருவார்” என்று தமிழ்த் தேசியவாதிகள் முழங்கிய போது கைலாசபதி எழுதுகிறார்:
“இந்திரா காந்தி தன்னாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களை திட்டமிட்N;ட ஒடுக்கி வருகின்றார். அண்மையில் அவரது தேர்தல் தொகுதியான உத்தரப் பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உயிருடன் கொழுத்தப் பட்டனர். மற்ற மாநிலங்களில் வாழும் சிறுபான்மை இனங்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து திட்டமிட்டு இல்லாமல் செய்கிறார். இவர் மூலமா இலங்கை சிறுபான்மையினரின் உரிமைகளைத் தக்க வைக்கப் பார்க்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள். இதே இந்திரா காந்தியோ, இந்தியாவோ தேவையேற்படின் இலங்கையில் சிறுபான்மையினரை அடக்கவோ அவர்களது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கவோ தயங்காது.”
இன்று சம்பூரில் நடப்பதென்ன? அதற்கு தமிழ்த்தேசியவாதிகள் சொல்லும் நியாயம் என்ன?
ஒன்று மட்டும் விளங்க வேண்டும். இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர் பற்றிய அனுதாப அலையுள்ளது. ஆயினும், தமிழக அரசோ பிரதான கட்சி எதுவுமோ தமிழருக்கு ஆதரவாக எதுவுமே செய்யாது. ஈழத் தமிழர் பற்றி ஆவேசமாகப் பேசிக் கொண்டே விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டுகிற ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கச் சிலருக்கு முடிகிறது. அதேபோல, டில்லியின் முடிவுகளை மீற மாட்டேன் என்கிற கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கவும் சிலருக்கு முடிகிறது.
நாங்கள் கேட்க விரும்புகிற பொய்களைச் சொல்கிறவர்களின் மொழி இனியதாயிருக்கலாம். ஆனால் அவர்களது நட்பு சந்தேகத்துக்குரியது. எனினும் அவ்வகையான பொருந்தா நட்பே தமிழ்த் தேசியவாதிகட்குத் தேவைப்படுகின்றது. அதுவே அவர்களது சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பொருத்தமானது.
இவ்விடத்தில் இந்தியாவின் மீதும், சர்வதேச சமூகம் மீதும் தமிழ்த் தேசியவாதிகள் வைத்திருக்கின்ற நம்பிக்கைகள் பற்றி அரசியல் விமர்சகர் ஒருவர் சொன்ன வரிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“இந்தியாவில் நாம் நம்புமாறு பரிந்துரைக்கப்படுகிற அரசியல் அமைப்புக்களதும் அரசியல் தலைவர்களதும் எண்ணிக்கை இந்துக் கடவுளரின் எண்ணிக்கையை எப்போது தாண்டும் என்று என்னாற் கூற இயலாது. ஆனால், என்றாவது தாண்டும் என்று தான் நினைக்கிறேன். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய சமூகம், ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் என்று பலவேறு தெய்வங்களை வேண்டிக் கொள்ளுவதில் தான் தமிழ்த் தலைமைகளது கவனங் குவிந்திருக்கிறது.”
விடுதலை என்பது காலக்கெடு வைத்து வெல்லப்படுவதல்ல. விடுதலை என்பது எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவொரு அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள் தனது தோள்கள் மீது விடுதலைப் போராட்டத்தை ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல. ஒரு ஆயுதப் போராட்ட வெற்றியை எடுத்து அதை விடுதலையாக மாற்றுகிற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள் இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையை கைலாசபதி சொல்லியபடி குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறக்கவிடலாகாது.
இன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் இன்று நிஜமான ஒரு சாத்தியப்பாடாகி வருகிறது. இது மிக ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.
உலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறை தொடர்பான எப் பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை.
தமிழ் மக்கள் முழுமையாக அரசியல் விழிப்புப்பெறாமல் அவர்கட்கு விடுதலையும் இல்லை விமோசனமும் இல்லை. அதுவரை கருணையின் பேரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவர்.
தமிழ்த் தேசியவாதிகளுக்குத் தேசிய நியாயம் பற்றிக் கோட்பாட்டு ரீதியான பதிலையும் கைலாசபதி வழங்கியிருந்தார்.
தேசிய நியாயம் தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டம் என்ற எல்லையைத் தாண்டும் போதே தேசிய மேலாதிக்கம் என்ற படிக்கட்டிற் காலை வைத்து விடுகிறது. ஐரோப்பிய வெள்ளை இனவாதமும் கிறிஸ்தவ மதவாதமும் ஐரோப்பிய தேசியவாதங்களும் யூத இன மக்களுக்கு எதிராக நடத்திய கொடுஞ் செயல்களின் வரலாறு பல நூற்றாண்டுக்கால விரிவை உடையது. அது ஜேர்மன் பாஸிஸமான நாற்ஸியமெனும் வடிவில் யூதர்களை ஒடுக்கியபோது ஐரோப்பியத் தேசியவாதங்கள் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஏகாதிபத்திய நலன்கட்காக உலக வல்லரசுகள் இஸ்ரேலை உருவாக்கிய பின், விடுதலைக்காகப் போராடிய யூத தேசியம் ஆக்கிரமிப்பாளனாகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை மத்திய கிழக்கிற் காத்து நிற்கும் காவலனாகவும் மாறி விட்டது. அரபுத் தேசிய வாதங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்கிற பலவேறு அரபு ஆட்சிகள் பலஸ்தீன மக்களது விடுதலைக்காகச் செய்ததை விடத் தேசியத்தின் போராலும் தமது நாடுகளில் தமது ஆட்சியை உறுதிப்படுத்தவும் தம் செல்வத்தைப் பெருக்கவும் செய்த காரியங்களே முதன்மையானவை.
தேசிய நியாயம் வலியுறுத்தும் தேசிய நலன் பிற தேசிய இனங்களின் நலிவிலும் அழிவிலும் தன்னை மேம்படுத்துகிற போக்கை ஒட்டியது. தேசியவாதக் கண்ணோட்டத்தில் தேசிய முரண்பாடுகள் ஓய்வதாயின் பிற தேசிய இனங்கள் ஒழிய வேண்டும். போர் இல்லாது இது இயலுமானதல்ல. ஹிற்லர் இவ்வாறான தேசியவாதத்தின் ஒரு உச்சக்கட்ட உதாரணம்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களது இனவிடுதலையை மலையகத் தமிழரினதும் முஸ்லிம்களினதும் விடுதலையினின்றோ சிங்கள மக்களது விடுதலையினின்றோ பிரித்து நோக்குவது ஒவ்வொரு விடுதலை இயக்கத்தையும் பலவீனப்படுத்துவதாகும் என்று கைலாசபதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தேசியவாதத்தின் அரசியற் தேவைகள் அதன் யதார்த்தத்திற்கும் அப்பாலான சில புனைவுகளை உருவாக்கி தேசிய அடையாளத்தையும் தேசிய இனத்தையும் தேசிய வரலாற்றையும் தேசிய கலாசாரத்தையும் பிற பொதுப் பண்புகளையும் அதன் வசதிக்கேற்ப வரையறுக்கத் தூண்டுகின்றன. இதற்குத் தமிழ்த் தேசிய வாதமும் விலக்கல்ல, என்னதான் உரிமை பற்றிப் பேசினாலும் இறுதி ஆராய்வில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் வர்க்க உணர்ச்சியும் வியாபாரமுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
தமிழ் மக்களின் உரிமை பற்றிய வீர வசனங்கள் பாரளுமன்றக் கதிரைகளுக்கு சாமரை வீசுவதற்கு உதவுவதற்கப்பால் எதையும் சாதிக்கவில்லை என்கிறார் கைலாசபதி. இது தமிழ்த் தேசியம் பற்றிய சரியான பார்வை என்பதை வரலாறு எமக்கு உணர்த்தியிருக்கிறது.
கைலாசபதி இப்போது உயிரோடு இருந்தால் தமிழ்த் தேசியவாதத்துக்குச் சார்பாக மாறி இருப்பார் என்பது சில தமிழ்த் தேசியவாதிகளின் வாதம். கைலாசபதி இன்று உயிருடன் இருந்தால் தமிழ்த் தேசியவாதம் பற்றி அவரது நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதற்கான விடையை அவர் எந்த விதமான அரசியற் சிந்தனையின் அடிப்படையிற் செயற்பட்டார் என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டியுள்ளது.
கைலாசபதி மாக்ஸிய லெனினியச் சிந்தனையை ஏற்றவர். திரிபுவாதிகளுடன் நின்றவர்கள் அனுபவித்த, அனுபவித்திருக்கக் கூடிய சலுகைகளையும் வாய்ப்பு வசதிகளையும் அவர் அறியாதவரல்ல.
அவரது தெரிவு அவரது அரசியற் பார்வையால் முடிவு செய்யப்பட்டது. இதனாலேயே அவரது தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
கூட்டணியும் அதன் தலைவர் அமிர்தலிங்கமும் தமிழரை ஏமாற்றிப் பிழைத்த கதையை கைலாசபதி தனது கட்டுரைகளில் தொடர்ந்து எழுதினார். அதிலும் குறிப்பாக ஜே.ஆரும் அமிர்தலிங்கமும் கூடித் தமிழரை ஏய்த்த கதையை இப்படி எழுதுகிறார் கைலாசபதி:
”ஜே.ஆர்.–அமிர் சந்திப்புகளின் போது கூட்டணித் தலைவர் அடிக்கடி கேட்கும் அதி முக்கியமான கோரிக்கை ஊர்காவல் படை திரட்டும் உரிமையாகும்.
இளைஞர்கள் தம்மை விட்டுப் பிரிந்து சென்ற நாட்கள் முதல் அமிருக்கு ஒரே ஒரு கவலை! படைகள் இல்லாத் தள(ர்)பதியாகத்தான் இருக்கின்றேனே என்று. எனவே ஊர்காவற் படைக்கு ஜே. ஆர் அனுமதி வழங்கினால் சம்பளம் கொடுத்தாவது தனக்கென ஒரு படையை வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவரின் ஆசை, அது கட்சிப்படையாகவும், கட்டுப்பாட்டை மக்கள் மீது செலுத்தும் படையாகவும் யாவற்றுக்கும் மேலாக, எதிர்ச்சக்திகளை மோப்பம் பிடித்து மடக்கும் படையாகவும் அது விளங்கும் என்பது அமிரின் எண்ணமாம். குறிப்பாக இளைஞர் சக்திக்கு மாற்றுசக்தியாகவும், “வேலைக்கார” படையாகவும் அது இருக்கும் என எண்ணுகின்றார் போல தெரிகிறது.
உத்தேச ஊர்காவல் படை தமிழர் படையாக இருக்க மாட்டாது என்றும். தமிழ் தெரிந்தவர்களைக் கொண்ட படையாகவே இருக்க முடியும் என்றும் பாதுகாப்புப் படையினர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனராம். கருணாநிதி, நெடுஞ்செழியன் பாணியில் தமிழ்ப்படை நடாத்தி, வீரவாள் ஏந்தி ஊர்வலம் வர எண்ணிய கனவுகள் பகற் கனவுகளாய் மாறிவிடுமா என்ற ஐயமும் கூட்டணியினரை வாட்டுகிறதாம். சரண் அடைந்தபின் தனித்துவம் பற்றி எப்படிக் கனவுகாண முடியும்?”
இதை வாசித்த போது எனக்கு ஒரு கவிதைதான் நினைவுக்கு வந்தது.
வேலி முருக்கங்கொப்பை முறிச்சவன்
வெளிச் சிவர் மூலையில் ஒண்டுக்கிருந்தவன்
கொடியில தொங்கின சீலை எடுத்தவன்
வீடியோக் கசற்றைக் கொண்டு போனவன்
எல்லா விவரமும் நல்லாக் கேட்டு
விளம்பரமாக அறிஞ்சு சொல்ல
எங்கடை உளவுப் படையப் போல
எந்த இயக்கமும் செய்யமாட்டின
எங்களை நீங்கள் கவனிப்பியளெனில்
தண்டம் விதிச்சுக் களவு போனதைப்
பறிச்சுத் தருவம்
அவசரமெண்டால்
விளக்குக் கம்பில தொங்கவும் விடுவம்
சமூக விரோதியள் தலையளை வெட்டிச்
சந்தி நடுவில வரியா வைப்பம்
எதிரி இயக்க ஆக்கள் செய்யுற
தூள் யாவாரம் கள்ளக் கடத்தல்
ஆர் ஆரோடை படுத்து எழும்பினை
எல்லாக் கதையும் நல்லா அறிவம்
கொழும்பில பஸ் ஸ்ற்றான்ட் குண்டு வைச்சது
சமூகத் தொண்டரைச் சாகக் கொண்டது
விரிவுரையாளரைத் தெருவில சுட்டது
எங்களக் கேட்டா என்ன தெரியும்?
அண்ணை
கோளி கீளி களவு போனதேல்
சொல்லுங்கோவன் பிடிச்சுத்தாறம்
தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றுவாயும் தமிழ் அடையாளத்துடனான அரசியற் தலைமைகளின் வரலாறும் படித்த, சொத்துடமைக்கார வர்க்கத் தலைமையும் அதனோடு நெருக்கமாகப் பிணைந்த சாதிய, நிலவுடைமைக் கண்ணோட்டங்களையுமே கொண்டிருக்கின்றன என்பதை தொடர்ந்து தனது கட்டுரைகளில் வலியுறுத்தியவர் கைலாசபதி.
தமிழ்த் தேசியம் சிங்கள மக்களை எதிரிகளாகக் கண்டு காட்டிய போதும் அதற்கு மாறாகச் சிங்கள மக்களை நண்பர்களாக மதித்து சிங்கள எழுத்தாளர், கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியவர் கைலாசபதி.
இலங்கையின் சுதந்திரத்தின் பின்பு தமிழ்த் தேசியவாதம் கொலனிய ஆதிக்கத்துடன் பகைமையற்ற ஒரு நிலைப்பாட்டிலேயே தொடர்வதற்கு அதன் முதலாளிய நிலவுடமை வர்க்கத் தன்மைகள் ஒரு முக்கியமான காரணம். அதைவிடத் தென்னிலங்கையின் முதலாளி வர்க்கம் சிங்களப் பேரினவாத அரசியலையே மேலும் வலியுறுத்தியதால் தமிழ்த் தேசியவாதத் தலைமையால் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் புறக்கணித்துச் சிங்கள தேசியவாதத்தையே தமிழ் மக்களின் ஒரே எதிரியாகக் காட்ட முடிந்தது.
தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் போக்கை அறிந்து கொள்ள, கைலாசபதியின் கட்டுரைகள் எவ்வளவு பயனுள்ளவை என்பதற்கு இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்:
“மாவட்ட அபிவிருத்தி சபைகள் வருவதை முன்னிட்டு தமிழர் வியாபாரக் கூட்டணியினர் வானளாவப் பேசினர். தாம் மேடைகளில் முழங்கிவந்த ‘ஈழத்தமிழகம்’ வந்ததற்குச் சமம் என்றும், சமஷ்டி அமைப்பை விட மாவட்ட அபிவிருத்தி சபை அமைப்பு சிறந்தது என்றும் பிரசாரம் செய்தனர். இவற்றையெல்லாம் வகுத்துக் கொடுத்த உலக சஞ்சாரி ஜெயரத்தினம் வில்சனைப் பெரிதும் பாராட்டினர். கூடவே நீலன் திருச்செல்வத்தின் பெருமையையும் பலவாறு புகழ்ந்தனர். அதிகாரம் பரவலாக்கப்படுகிறது என்றும் சுதந்திரத்திற்கு அடிப்படையே அபிவிருத்திதான் என்றும் பிதற்றினர், வடபகுதியைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபை சிறு பாராளுமன்றமாக விளங்கும் என்றும் கூறினர். மாவட்ட சபை நடவடிக்கைகளை, பாராளுமன்ற ஹன்சார்ட்போல வெளியிடவும், பாராளுமன்றக் கட்டிடத்தை போல யாழ்ப்பாண அபிவிருத்திச் செயலகத்துக்கு புதியதொரு– மாபெரும் –கட்டிடம் நிறுவ வேண்டும் என்றும் பேசப்பட்டது. இவ்வாறெல்லாம் தாம் பகற்கனவுகள் கண்டது மட்டுமல்லாமல் பிறரையும் பிரமைகளில் ஆட்டிப்படைத்தனர் கூட்டணிப் பிரமுகர்கள்.”
“ஒரு சில வாரங்கள் கூட கழியவில்லை. அதற்குள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் வண்டவாளம் வெளிப்பட்டுவிட்டது. பொதுமக்களுக்கும் பெரும்பாலான அரசியல் அவதானிகளுக்கும் விடயம் முன்னரே தெரிந்ததுதான். ஆனால் கூட்டணித் தலைவர்கள் வழக்கம்போலவே ஏமாற்று நாடகத்தை நடாத்திக் கொண்டிருந்தனர். இப்பொழுது மாவட்ட அபிவிருத்திச்சபை உறுப்பினர்களே கசப்பான உண்மையை ஒ;புக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். எத்தனை நாட்களுக்குத்தான் ஏமாற்றிப்பிழைக்க முடியம்?”
தமிழ்த் தேசியத் தலைமைகள் எப்படி இருந்தன, அவற்றின் செயற்பாடுகள் எப்படி இருந்தன என்பது பற்றி கைலாசபதி என்ன எழுதினார் என்பதைப் பார்ப்பது தமிழ்த் தேசியத் தலைமைகள் எப்படி இருந்தன என விளங்க உதவும்:
“இப்பொழுது பதவியிலிருக்கும் அரசாங்கம் தேர்தலுக்குப் பின் 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வேளையில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பத்திரிக்கை நிருபர்கள் கொழும்புக்கு வந்திருந்தனர். அப்பொழுது அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதிய நிருபர் ஒருவர், ‘தமிழ் ஈழம்’ கேட்ட தலைவர்களைச் சந்தித்ததைப் பற்றி எழுதினார். கொழும்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிலே குளிரூட்டப்பட்ட அறையிலே கொக்கா கோலா அருந்திக் கொண்டு தள(ர்)பதி அமிர்தலிங்கத்தைத் தான் பேட்டி கண்டதாக அந்த நிருபர் தொடங்கி, தனிநாடு கோரும் இன விடுதலைக்காக உழைக்கும் ஒரு தலைவரை அத்தகைய குஷியான சூழலில் கண்டது விசித்தரமான சம்பவம்தான் என்று முடித்திருந்தார்.”
கைலாசபதியின் அரசியல் கட்டுரைகளில் இழையோடும் அங்கதச்சுவையும் சம்பவங்களை அவர் விபரிக்கின்ற விதமும் அழகானவை. இவை வாசகனை வாசிக்கத் தூண்டுபவை. பத்திரிகைளில் வராத செய்திகளை தனது விமர்சனக் கண்ணோட்டத்தில் அவர் எழுதுவார். அவர் எழுதுகிற செய்திகளே விமர்சனங்களாக இருக்கும்.
ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்:
“அண்மையில் பிரதமர் பிரேமதாசா வடபகுதிக்கு விஜயம் செய்தார். பிரேமதாசா வந்த போது யாழ். கச்சேரியில் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமான மாநாடு ஒன்று நடாத்தப்பட்டதும், ‘உத்தியோகபூர்வமான’ அந்தக் கூட்டத்திலே தமிழர் வியாபாரக் கூட்டணியை சர்ந்த பதினொரு (வடகுதி) நாடாளும்மன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாயிருந்ததும் வழக்கம்போல பிரதமரை அமிர் உட்பட தலைவர்கள் நாவலிக்கப் புகழ்ந்ததும் ஓரளவு தினசரிகளில் வெளிவந்த செய்திகள். கச்சேரியில் நடந்த மாநாடு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது@ ஒவ்வொரு எம்.பியும் ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டங்களுடனும் ஆலோசனைகளுடனும் வரவேண்டும் எனவும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
எம்.பி.க்கள் தமது திட்டங்களைக் கூறுமாறு பிரேமதாச கேட்டபொழுது.
இரண்டொருவர் இன்றைய நிலையில் நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைத் திட்டங்களை முன்வைத்தனராம். உதாரணமாக கடல் நீரிலிருந்து உப்பை அகற்றி நல்ல தண்ணீர் விநியோகம் செய்யலாம் என்றாராம் ஒரு கூட்டணி எம்.பி.
இவ்வாறு தமிழ்ப் பிரதேசத்தில் பொருளாதார – தொழில்நுட்ப அபிவிருத்தி குறித்து ஆக்கபூர்வமான நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை ஒரு மாவட்ட அபிவிருத்தி ஆலோசனை கூட்டத்திலே தக்கபடி சமர்ப்பித்து வெற்றிகாண மாட்டாத தமிழ்த் தலைமைகளா தனிநாடு பெற்றுத் தரப் போகிறார்கள்?” என்று தனது கட்டுரையை முடிக்கிறார்.
எளிய நடையில் மக்களுக்கு அரசியலை புரியவைக்கக்கூடிய வகையிலேயே கைலாசபதி எழுதி வந்தார். அவர் இறுதி வரை வெகுஜன அரசியலை வலியுறுத்தியவர். வெகுஜன அரசியல், மக்கள் யுத்தம், போராட்ட ஐக்கியம் போன்ற கருத்துக்களின் வழிப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தால் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களது முழுமையான விடுதலையைப் பெற்றுத்தர முடியும் எனச் சொன்ன கைலாசபதி 1980களின் தொடக்கத்தில் தமிழ்த் தேசியத்தின் திசைவழி பற்றி எழுதும் போது: “இன்று கூட்டணியை எதிர்நோக்கும் தருக்கரீதியான கேள்வி இதுதான்: ஜனநாயக விரோதம், பாசிஸம், இன ஒதுக்கல், ஏகாதிபத்திய வழிபாடு, மோசமான மதவெறி இவை போன்றவற்றை கூச்சம் இல்லாமல் கடைப்பிடிக்கும் அரசாங்கத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? ஆசனங்களைப் பாதுகாப்பதா? அரசியல் உரிமைகளுக்காகப் போராட முனைவதா? என்பதே.”
இதில் எந்தப் பாதையை கூட்டணி முன்னெடுத்தது என்பதும் அதன் விளைவுகள் எங்களை எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதையும் நாம் எல்லோரும் நன்கறிவோம். ‘கடவுள்தான் காப்பாற்ற வேணும்” என்ற வாசகத்தின் பின்னால் இருக்கிற இயலாமையும், கபடமும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியவை. இங்கே நான் கேள்விக்கு உட்படுத்துவது அறியாமையாற் செய்கிற பிழைகளையல்ல. முழு அரசியல் அயோக்கியத்தனத்தையே!
“இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்” என்ற நூலில் கைலாசபதி சொன்ன வரிகளோடு எனது உரையை முடிக்க விரும்புகிறேன். அவை இன்றைய சூழலிலும் எவ்வளவு முக்கியமானவை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வரிகள் 1979 இல் எழுதப்பட்டவை.
“தமிழ்த் தேசியம் இன்று முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. தனக்கு முன்னுள்ள இரு வழிகளில் ஏதாவது ஒன்றை அது தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று தனிமைப்பாடு மற்றும் மேலாதிக்கம் ஆகியவற்றைச் சார்தல். மற்றது பெரும்பான்மைச் சமூகத்துக்கும் தனக்கும் பொதுப்படையான அம்சங்களை இனங்கண்டு சனநாயக முறையிலான வாழ்க்கை மலர உழைத்தல். இவற்றில் எதைத் தேர்வது என்பது வெளிப்படையானது. ஆனால் இதற்கு ஒடுங்கிய இன நலன்களைத் துறந்துவிட்டு மனிதனை மனிதன் சுரண்டாத சமூக ஒழுங்கை நோக்கிச் செல்லும் தேசியப் போராட்டத்தை இரு இனங்களும் இணைந்து மேற்கொள்ளல் தவிர்க்கவியலாததாகும்.”
– அஸ்வத்தாமா
www.ndpfront.com on December 3, 2011
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply