வட கிழக்கு இணைப்புக்கு உடன்பட்டால் அரசை விட்டு வெளியேறுவோம்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கு அரசாங்கம் உடன்படுமாகவிருந்தால் நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இரு மாகாணங்களும் இணைந்திருந்தபோது மூவின மக்களும் முட்டி மோதி இரத்த ஆறே ஓடியது. கிழக்கு பிரிக்கப்பட்டதையடுத்து இன்று அந்த மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

வடக்கு கிழக்கை இணைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு இணைப்பதற்கு உடன்பட்டால் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைவது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அரசாங்கம் பங்குகொள்ளக்கூடாது. அவ்வாறு வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அரசாங்கம் உடன்படுமானால் அரசை விட்டும் வெளியேறுவோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மூவின மக்களும் கிழக்கை நிர்வாகம் செய்து செழிப்புடன் இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைய விடமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் கூறிவைக்க விரும்புகின்றோம். அத்துடன் ஜனாதிபதிக்கும் அரச தரப்புக்கும் இதை தெளிவாகச் சொல்லி வைத்துள்ளோம்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மற்றும் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply