சர்வதேசத்துக்கு இலங்கை பதில் சொல்லியே தீர வேண்டும்: சம்பந்தன்

சர்வதேச சமூகத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றில் இன்று (14) உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளே இலங்கை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

எனவே சர்வதேசத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது.

இதனை இலங்கை அரசு தட்டிக்கழிக்க முடியாது. பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் நியமித்த ஐநா நிபுணர் குழுவை இலங்கை அரசாங்கம் உதாசீனப்படுத்தியது மாத்திரமன்றி கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை உள்நாட்டிலேயே அமைத்துக் கொண்டது.

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்திய சர்வதேச விசாரணை ஆணைக்குழு திருக்கோணமலையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அம்பாறையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, கெப்பத்திகொல்லாவையில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தி இலங்கை அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளது.

சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் சாதக நிலையில் இலங்கை அரசு இல்லை.

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழர்களை விடுவிப்பதில் தீவிரமாகச் செயற்படுவதாக இலங்கை அரசு குற்றம் சுமத்துகிறது.

ஆனால் சர்வதேச சமூகம் வலியுறுத்தும் அதே விசாரணைகளையே புலம்பெயர் மக்களும் வலியுறுத்துகின்றனர்.

எனவே சர்வதேசக் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply