புதுக்குடியிருப்பு மக்களுக்கு போதிய வைத்திய உதவிகள் இல்லை
புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையில் ஒரேயொரு வைத்தியர் உள்ளதுடன் ஆண் பெண் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு ஒரு விடுதி மட்டுமே இருக்கின்றது. இதனால் வைத்திய சாலைக்குச் செல்லும் நோயாளர் பெரும் சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பலதரப்பட்ட வசதியீனங்கள் மத்தியில் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளில் ஒன்றான வைத்திய சேவையை ஒழுங்காகப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்ற மக்களில் இதுவரை சுமார் 25ஆயிரம் மக்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக ஒரேயொரு வைத்தியசாலை மட்டும் இயங்கி வருகின்றது. இந்த வைத்தியசாலையில் ஒரேயொரு வைத்தியர் மாத்திரம் கடமையாற்றி வருகிறார்.
இவர் விடுமுறையில் செல்லும் காலப்பகுதியில் பதில் வைத்தியர் எவரும் நியமிக்கப்படாதமையால் அங்கு செல்லும் நோயாளர் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
இவர்கள் 30 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள முல்லைத்தீவு வைத்தியசாலைக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். போக்குவரத்து வசதியில் லாத இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தகுந்த சிகிச்சை பெற முடியாமல் திண்டாடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை மேற்படி வைத்தியசாலையில் ஆண்பெண் நோயாளர் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கு ஒரேயொரு விடுதி மட்டும் இருப்பதனால் அங்கு செல்லும் நோயாளர் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். சகலதையும் இழந்த நிலையில் மீள்குடியேறிய தமக்கு சீரான வைத்திய சேவையை வழங்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply