வடக்கின் வசந்தம் வடக்கின் துன்பமாக மாறிவிட்டது
வடக்கின் வசந்தம் என்று ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இன்று வடக்கின் துன்பமாக மாறிவிட்டதாகத் தெரிவித்த கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் மின்சாரத்தைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து மீள் குடியேற்றப் பிரதேசங்களின் நாட்டப்பட்ட கம்பங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மின் வலு எரிசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவா தத்தில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
செல்வம் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
வடக்கின் வசந்தம் எனுமொரு திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது. இதன்மூலம் எமது மக்களுக்கு தென்றல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக இன்று அங்கு சூறாவளிதான் வீசிக் கொண்டி ருக்கின்றது.
மின்சாரத்தைப் பெற்றுத்தரப் போவதாகக் கூறி மின் கம்பங்கள் நாட்டப்பட்டன. ஆனால் அங்கு மின்கம்பிகள் இணைக்கப்படவில்லை.
இந்த வடக்கின் வசந்தம் இடையில் நிறுத்தப்பட்டமைக்கு சீனாவுடனான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள குளறுபடிகளே காரணமாகும்.
2013ஆம் ஆண்டில் முழு நாட்டுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக மஹிந்த சிந்தனை கூறுகின்றது. எனினும் வடக்கைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தின் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் அது எவ்வாறு சாத்தியமாகப் போகின்றது.
மீள்குடியேற்றிவிட்டதாகவும் வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும் சர்வதேசத்துக்கு கூறப்படுகின்றது. எனினும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் குறித்த பகுதிகளுக்கு கொண்டு போய் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினைகளை எடுத்துரைத்தால் அரசாங்கம் எம்மீது குறை காணுகின்றது. எமது மக்களின் பிரச்சினைகளை குறைபாடுகளை வெளிக்கொணரும் பொறுப்பில் நாம் இருக்கின்றோம்.
மீள்குடியேற்றப் பகுதிகளில் எமது மக்கள் இன்றும் இருளில்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு மின்சார வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
தேர்தல் காலங்களில் வருகின்ற அரசியல்வாதிகள் வாக்குகளை குறி வைத்து வாக்குறுதிகள் வழங்கி மின்சாரம் பெற்றுத் தருவதாக மின் கம்பங்களையும் நாட்டிச் சென்றனர்.
ஆனால் இன்று வரையில் மின்சாரம் வழங்கப்படாத நிலை அந்த கம்பங்கள் தற்போது பழுதடைந்து காணப்படுகின்றன.
எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர். மின்சாரம் வழங்கப்பட்டுள்ள நகர்புறங்களில் நாளொன்றுக்கு 5 தடவைகள் மின்தடை ஏற்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் நாள் முழுவதும் இந்த தடை நீடிக்கின்றது. இதனால் மாணவர்கள் முதல் சகலருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மொத்தத்தில் வடக்கின் வசந்தம் இன்று வடக்கின் துன்பமாக மாறியிருக்கின்றது. எமது மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply