பண்டிகைக் காலத்தில் மக்கள் மீது விழும் சுமைகள்

பண்டிகைக்காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் உணவுப் பொருட்கள் எம் மத்தியில் பெரிதும் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. இந்த பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெருமளவானோர் தமக்கு தேவையான உணவு பொருட்களை முற்கூட்டியே கொள்வனவு செய்து வைத்துக்கொள்வதில் ஆர்வம் செலுத்துவர்.

இதனை நன்கு அறிந்திருக்கும் வர்த்தகர்கள் இக்கால கட்டத்தில் சாதாரண விலையை விட அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடுவது பலர் அறிந்தது. சில நாட்களுக்கு முன்னர் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு பொது மக்களின் நலன் கருதி விழா காலப்பகுதியில் பொருட்களின் விலையேற்றத்துக்கு எந்த வித அனுமதியும் வழங்கப்படாது, அவ்வாறு விலை அதிகரித்து விற்பனை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது.

இக்கால கட்டத்தில் மரக்கறி வகைகளும், பொது மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப்பொருளாக அமைந்துள்ளது. இந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் (11.12.2011) உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பிளாஸ்ரிக் கூடைககள் பயன்படுத்தபபடுவது கட்டாயம் எனும் சட்டமுறை கொண்டு வரப்பட்டது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் நீண்ட கால நோக்கம் அமைந்துள்ளதென அரசு அறிவித்திருந்தது. இந்த நடைமுறையினால் மரக்கறி மற்றும் பழவகைகள் சேதமடைவது தவிர்க்கப்படுகிறது. அத்துடன் மரக்கறிகளை சுத்தமாக பேணுவதற்கும், நீண்ட காலம் பழுதடையாமல் பேணுவதற்கும் இந்த பிளாஸ்ரிக் கூடைகள் சிறந்த தீர்வாக அமைந்துள்ளன.

நுகர்வோர் எனும் வகையில் இந்த புதிய முறை வரவேற்கத்தக்க விடயம். பெரும்பாலான மக்கள் இன்று சுப்பர் மார்க்கட்களில் தமக்கு தேவையான மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்ய இந்த சுத்தம், நீண்ட கால பாவனை போன்றன காரணங்களாக அமைந்துள்ளன.

ஆயினும் திடீரென விற்பனையாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் வகையில் இந்த பிளாஸ்ரிக் கூடை முறை நடைமுறைப்படுத்தப்படாமல், படிப்படியாக அல்லது கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படுமாயின் அது பெரிதும் வரவேற்கத்தக்கதாக அமையும். இந்த கட்டம் கட்டமான நடவடிக்கையில் உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இந்த பிளாஸ்ரிக் கூடைகளை கொள்வனவு செய்வதற்கான சகாய கடனுதவி திட்டம் வழங்கப்படலாம்.

மேலும் இந்த தரப்பினருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்த வே;ண்டியதும் கட்டாயமாகும். .இவர்களின் கருத்துப்படி, தமக்கு லொறிகளில் மரக்கறிகளையும், பழவகைகளையும் மூடைகளின் மூலம் ஏற்றுவதனால் பெருமளவு மரக்கறிகளை ஒரே தடவையில் கொண்டு செல்லக்கூடிய வசதி காணப்படுவதாகவும், பிளாஸ்ரிக் கூடைகளை ஏற்றும் போது அவை பெருமளவான இடத்தை கொள்வதால் அதிகளவான மரக்கறி வகைகளை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது என்பதாகும்.

கொடுமையிலும் கொடுமை, இந்த மரக்கறி வகைகள் பாதையில் வீசப்பட்டு நெருப்பிட்டு கொளுத்தப்பட்டமை. உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐ.நா எதிர்வு கூறியுள்ள நிலையில், இலங்கையில் இது போன்ற விஷமத்தனமான செயற்பாடுகள் எந்தவகையிலும் வரவேற்கப்படுவதாக அமைவதில்லை.

அரசாங்கம் மரக்கறி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் கொழும்பில் வீதியோரங்களில் கூட மரக்கறி பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு பராமரித்து வருகிறது. கொழும்பு நகரின் பல பகுதிகளில் இதை காண முடிகிறது.

இந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்ட தீர்வு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலப்பகுதியினுள் அரசும், விற்பனையாளர்களும் சுமூகமான தீர்வுக்கு உடன்பட்டு, இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்த சுமை சென்றடையக்கூடாது. இந்த செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவது நுகர்வோர் என்பதை இரு தரப்பினரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேற்றைய தினம் (14) கொழும்பில் கோவா கிலோ ஒன்று 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. பச்சை மிளகாய 1 கிலோ 1000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது, போஞ்சி 500 கிராம் 400 ரூபாவுக்கு விற்பனையானது. பல இடங்களில் மரக்கறிகள் விற்பனைக்கு இல்லை.

அடுத்த புதிய பிரச்சனையாக பொது போக்குவரத்து (தனியார் பேருந்து) சேவைகள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என கோரி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து போக்குவரத்து சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தமக்கான உரிமைகளை போராடி பெறவேண்டிய நிலை ஏற்படினும், பொது மக்களை பாதிப்படையச் செய்யாத வகையில் அவை இடம்பெற வேண்டியது கட்டாயமாகும்.

விடுமுறை காலத்தில் நகர்புறங்களில் பணியாற்றும் நபர்கள் தத்தமது ஊர்களுக்கு இனபந்துகளை சந்திக்க செல்வது வழமையாகும். சாதாரணமாக இந்த காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும் போக்குவரத்து பேருந்துகளின் எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதாக அமைவதில்லை.

இந்த நிலையில் தனியார் பேருந்து ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பார்களாயின் பொது மக்கள் மற்றுமொரு பின்னடைவை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் செயற்படுவார்களாயின் மக்களின் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு இருக்கும்.

எனவே பண்டிகைக்காலத்தில் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் சந்தோஷமாக அனைவரும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. முன்கூட்டியே பிஎன்தமிழ் வாசகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், விளம்பர முகவர் அமைப்புகளுக்கும் தனது நத்தார் மற்றும் புதுவருட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

www.bntamil.com/editorial.php

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply