கிழக்கைத் துண்டாடவே முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டமைப்பு பேச்சு
கிழக்கு மாகாணத்தைத் துண்டாடும் ஒரே நோக்கத்துக்காகவே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு நடத்துகிறது. அதாவது, தனி அலகு தேவையாகவுள்ள முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசுகிறது. கிழக்கு மாகாணத்தை தனி அலகாக பிரித்து தமிழ் மக்களை துன்பங்களுக்குள் சிக்கவைப்பதற்கே முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தனி அலகு என்பது தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் சிந்திக்கவேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மண்முனை வடக்கு பிரதேச பெண்கள் வாழ்வாதார திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“எமது சமூகம் வரலாற்று ரீதியாக ஒரு பொருளாதார ரீதியிலான சமூகத்தை உருவாக்க என்றும் முயன்றது கிடையாது. அதேபோன்று கிறிஸ்துவுக்கு முற்பட்ட வரலாற்றைக்கொண்ட இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தங்கெளுக்கென்று ஒரு அரசியல் அடையாளம் அற்றவர்களாகவே வாழ்ந்துவருகின்றோம்.
இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் யாருக்கும் கொடி பிடிக்கும் அரசியலாகவே இருந்துவருவது வேதனைக்குரிய விடயமாகும்.அதனை தொடர்ந்துகொண்டுசெல்லக்கூடாது என்பதில் நான் உறுதியாகவுள்ளேன்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரச்சினையான தமிழ் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியே உள்ளது. அத்துடன் பிரச்சினையான அரசியல்வாதியாக நான் உள்ளேன்.
இன்று முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றது. கிழக்கின் தனி அலகு தேவையாகவுள்ள முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனைப்பற்றிப் பேசப்போகின்றது?
தனி அலகு என்பது தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் சிந்திக்கவேண்டும். ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி பிரதேசங்களைக்கொண்டு எவ்வாறு தனியலகு அமைப்பார்கள்? துண்டுதுண்டாக முஸ்லிம் பிரதேசங்களைக்கொண்டு எவ்வாறு தனியலகு அமைப்பார்கள் என்பதை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்” என்றார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“பெண்கள் அமைப்புகள் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருக்கின்றவர்களுக்கே நான் உதவி செய்வேன். தொடர்ந்து நாங்கள் முன்னேற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை கணவனை இழந்த பெண்களின் பிரச்சனை பூதாகரமான பிரச்சினையாக இருந்தது.
இன்று அதற்கான ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அந்தத் திட்டம் வெற்றிபெறுமாக இருந்தால் கிட்டத்தட்ட எட்டாயிரம் கணவனை இழந்த பெண்கள் சுய வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டும். நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற விதவைகளுக்கு மாத்திரம் அவர்களுக்கான சுய வருமானத்தை தரக்கூடிய துறைகளை தெரிவு செய்தல் பயிற்சியளித்தல் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான இணைப்புகளை செய்துகொடுத்தல் போன்ற பல விடயங்கள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதற்காக மூன்று பெண்கள் அணியை பயிற்சிக்காக அனுப்பியிருந்தோம்.
அதில் இரண்டு அணி வந்துவிட்டது. அப்பொழுது கணவனை இழந்த பெண்களின் பிரச்சினை சற்றுக் குறைவடையலாம். தன்னுடைய குடும்பத்திற்காக அடித்துப் பேசுகின்ற ஒரு ஆண்மையான பெண்ணை மட்டக்களப்பு மாவட்டத்திலே நான் காணவில்லை.
எமக்கு இருக்ககூடிய பிரச்சினைகளை மொழியறிவுடன் அணுகி அவற்றை சர்வதேசமயப்படுத்தும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பெண்கள் இன்று எம்மிடையே இல்லை” எனக் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply