ஆத்மார்த்த பிரதிநிதிகள், ஏகப்பிரதிநிதிகள் அல்ல?

அரசாங்கமோ அல்லது த.தே. கூட்டமைப்போ பேச்சுவார்த்தையில் சிறப்பாக செயற்பட்டதாக கூற முடியாது. இப்போது பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் அணி ஆளும் கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தான் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக காட்டிக்கொள்வதுடன் இதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கருதுகின்றது. இது நடந்தால் மட்டுமே நாடாளுமன்றக் குழுவில் தன்னால் பங்குபற்ற முடியும் என்ற நிலைப்பாட்டில் அது உள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதுபற்றி அரசாங்கம் பெரிதாக பேசுவது தமிழர்களின் சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்கும் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதி மட்டுமே, அது அரசாங்கத்தின் பிரதிநிதியல்ல என அரசாங்கம் கூறியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முக்கிய கட்டத்தில் ரவூப் ஹக்கீம் கூறிய கருத்து பேச்சுவார்த்தை செயன்முறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளைவிட கூடுதலான விடயங்களும் உள்ளன என்பதை அனைவருக்கும் கூறுவதாக உள்ளது.

வடக்கு கிழக்கு என்றாலும் சரி, அதற்கு வெளியிலுள்ள தமிழ்ப் பேசும் மக்களினாலும் சரி இது உண்மையாகும். மறக்கப்பட்டுவிட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசு பற்றி குறிப்பிடுவதாயின் அது மலையக தமிழர்களின் அபிலாஷைகளை கருத்தில் எடுக்கவேயில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இவர்கள் எல்லோரும் தமிழ் பேசுபவர்கள். இவர்கள் மிகவும் மோசமாக பாகுபாடு காட்டப்படுபவர்கள். இவர்கள் தமிழ் பேசுவோராலும் தமிழ் பேசாதோராலும் மோசமாக நடத்தப்படுகின்றனர்.

சிங்களவர்களைப் போலவே தமிழ்ப் பேசுவோரின் பல்வேறு பிரிவினரும் பிரிந்து காணப்படுகின்றனர். இதனால் நாடாளுமன்ற தெரிவுக்குழு நல்ல வழியாகும்;. நாடு தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு முன்னேற வேண்டுமாயின் ஒரு பொது நிலைப்பாடு எட்டப்பட வேண்டும்.

அமைச்சரவைப் பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வெல, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினையானதாகக் கருதப்படும் வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி தொடர்பான அதிகாரங்கள் என்பவற்றில் விடாப்பிடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் கொண்டுள்ள மாநில அரசாங்கங்களை கலைக்கும் அதிகாரங்கள் பற்றி அமைச்சர் குறிப்பிட்டமை, இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு உள்ள பயத்தை நீக்கக்கூடியதாகக்கொள்ள முடியும். எப்படியாயினும் இந்தியா மாதிரியான தீர்வு அரசியல் யாப்பு மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

இந்த வகையில், மாநில அரசாங்கங்கள், சட்டசபை ஆகியவற்றை கலைப்பது பற்றிய மத்திய அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்த காலப்பகுதிக்குள் மீள் பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இந்திய சட்டம் வலியுறுத்துவதை இலங்கை கவனத்தில் கொள்ளலாம்.
இரண்டு பிரிவினரும் சேர்ந்து பெரிதாக்கியுள்ள அளவுக்கு காணி தொடர்பான அதிகாரம் சிக்கலானது அல்ல. காணி அதிகாரம் மாகாணசபைகளுக்கு ஒப்படைக்கப்படும்போது தமிழ் பேசும் பிரதேசங்களுக்கு வெளியேயுள்ள மாகாணங்களும் இந்த அதிகாரத்தை அனுபவிக்கும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது வித்தியாசமானது. இதில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு அப்பால் போக முடியாது. கிழக்கு மக்களின் மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் கிழக்கில் சனத்தொகை பரம்பலின் தனித்துவமான தன்மையும் முக்கிய பங்கு செலுத்துவன.

ஒருவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தத்தம் மக்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிப்பவர்களாக இருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் அவை ஏகப்பிரதிநிதிகளாக இருந்ததில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னரும் வேறு ஆட்கள் இருந்துள்ளனர். இதன்பின்னர், வேறு யாரும் வரக்கூடும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதிக்கம் தேர்தல் முடிவுகளால் பெறப்பட்டது. இலங்கையில் பதவியிலிருக்கும் அரசாங்கத்தை அடுத்த தேர்தலில் கவிழ்த்து விடும் பழக்கம் உண்டு.

தமது ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் தலைவர்கள் எப்போதும் எதிர்க்கட்சியாகவே சிந்தனையிலும் செயலிலும் உள்ளனர் என்பதை தமிழ் சமூகம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு அதிகாரத்தில் உள்ள கட்சியாக சிந்தித்து நடப்பது கலாசார, உளவியல் பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக உள்ளது.

இதுவெல்லாம் ஒன்றைப்பார்க்கும் விதம் பற்றியாகும். அப்படி இல்லை எனக் கொண்டாலும் சகல தரப்பினரதும் பார்வையை மறுபக்கத்தில் உள்ளவர்கள் சரியாக பார்க்க வேண்டும். இதுவே பிரச்சினையைத் தீர்ப்பதன் முதல் படியாகும்.

:என்.சத்தியமூர்த்தி
(தமிழில் ந. கிருஷ்ணராசா)
tamilmirror.lk

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply