குடும்ப ஆட்சியை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து: இம்ரான் கான்
“பாகிஸ்தானின் முக்கிய கட்சிகள் எல்லாம் குடும்ப ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கின்றன; இதை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகும்’ என்று பொரிந்து தள்ளினார் தேரிக் இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான்.
பாகிஸ்தானின் ஹரீபூர் என்ற ஊரில் சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் தனது மன ஆதங்கத்தை அவர் கொட்டித் தீர்த்தார். இந்த இடம் கைபர் – பக்டூன்கவா மாகாணத்தில் இருக்கிறது.
“அரசியல் கட்சிகளை இங்கே குடும்பச் சொத்து போல நடத்துகிறார்கள். அப்பாவுக்குப் பிறகு பிள்ளையைத் தலைவர் ஆக்குகிறார்கள். தகுதி இருக்கிறதோ இல்லையோ, தலைவரின் பிள்ளைதான் அடுத்த தலைவர் என்று அறிவித்துவிடுகிறார்கள்.
இதனால் அந்த குடும்பத்துக்கு முறைவாசல் செய்கிறவர்கள் மட்டும் நிர்வாகிகளாக நீடித்து, ஆட்சியில் இருக்கும்போது சம்பாதித்துக் கொள்கிறார்கள்.தகுதியிருந்தும் கட்சியில் மற்றவர்கள் எல்லாம் ஓரம்கட்டப் படுகிறார்கள். இதைக் கேள்வி கேட்பவர்கள் கட்சியை அழிக்க வந்த எதிரிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்.நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் தியாகம் செய்தவர்கள், அறிவாளிகள் என்று பலர் இருந்தாலும் ஷெரீஃபுக்குப் பிறகு அவருடைய பிள்ளைக்குத்தான் தலைவர் பதவி செல்கிறது.
மிகுந்த ஜனநாயகம் உள்ள கட்சி என்று தன்னை கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியிலும் இதே கதைதான். ஆசிஃப் அலி ஜர்தாரிக்கு உடல் நலக்குறைவு என்றதுமே அடுத்த தலைவர் பிலாவல்தான் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். ஒழுங்காக உருது பேசத் தெரியாவிட்டாலும் பிலாவல்தான் அடுத்து தலைவராக வரப் போகிறார். இப்படி அப்பாவுக்குப் பிறகு மகன் என்று தலைமை செல்வது ஜனநாயகம் அல்ல, ஜனநாயகத்தைக் கேலி செய்வதாகும். இதுதான் பரம்பரை ஆட்சி முறை’ என்று சாடியிருக்கிறார் இம்ரான் கான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply