தமிழ் மக்களின் கண்ணீருக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விடை தேடவில்லை: சிறி ரெலோ தலைவர் உதயராசா

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தமிழ் மக்களின் கண்ணீருக்கு விடை தேடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழு முன்னிலையில் தமது துயரங்களை கூறியிருந்தனர். ஆனால் அதற்கான விடை வழங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்று சிறி ரெலோ அமைப்பின் தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தினால் நல்லிணக்க ஆணைக் குழு கடந்த வருடம் அமைக்கப்பட்டபோது மாவட்டங்கள் தோறும் விசாரணைகள் நடத்தப்பட்டது.

இதன்போது ஆணைக்குழு முன் தோன்றிய பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலரும் தமது துயரரங்களை கொட்டித் தீர்த்திருந்தனர். தாம் பட்ட துன்பங்களுக்கு ஆணைக்குழு உரிய பரிகாரம் காணும் என்ற நம்பிக்கையே மக்கள் மத்தியில் காணப்பட்டது.

ஆனால், தற்போது ஆணைக்குழுவின் அறிக்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த பரிகாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இது பாதிக்ககப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் மனக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சில விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவானது உரிய பந்துரைகளை வழங்கியுள்ள போதிலும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய விடயங்களில் உரிய தீர்வினை ஆணைக்குழு வழங்கவில்லை. இது தமிழ் மக்களை ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையினை சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பனவும் விமர்சித்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களுக்கு விடிவினை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் கண்ணீருக்கு விடை கூறத் தவறியிருக்கும் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையாவது அரசாங்கம் அமுல்படுத்துவதுடன் அதற்கு மேல் சென்றும் உரிய தீர்வுகளைக் காண முயல வேண்டும். இதன் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=19_12_2011_001_012&mode=1
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=19_12_2011_014_003&mode=1

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply